‘ஒரு சிகரெட் கொடுங்க!’

பதிவு செய்த நாள் : 17 மே 2019

கடந்த, 1971ல், அப்போதைய மதுரை மாவட்டம், உத்தமபாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

தினமும், பள்ளிக் கூடம் ஆரம்பிப்பதற்கு முன், சில மாணவர்களுடன், அருகில் இருக்கும், கருப்பணசாமி மலைக்குச் சென்று, புகைப்பிடிப்பது, என் பழக்கம்!

ஒரு நாள், சந்தோஷமாக, புகைப்பிடித்து கொண்டிருந்த போது, தமிழாசிரியர் துரைப்பாண்டி எங்களைப் பிடித்து விட்டார்.

'என் மாணவ செல்வங்களுக்கு நான் எவ்வளவோ கற்று கொடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை, புகைப்பிடிப்பதை கற்றுக் கொள்ளாத நான், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் போகிறேன்... எனக்கும், ஒரு சிகரெட் கொடுங்கள்...' என்று வலுக்கட்டாயமாக சிகரெட்டையும், தீப்பெட்டியையும் பறித்து, புகைக்க ஆரம்பித்து விட்டார்.

புதுப்பழக்கம் என்பதால், தொடர்ந்து இருமல் வர, அதிர்ச்சியடைந்த நாங்கள், 'சார்... இதுவரை புகைப்பிடிக்காத நீங்கள், இந்த காரியத்தை செய்யலாமா... இனி இந்த சிகரெட்டை கையால் கூட தொட மாட்டோம்...' என்று சத்தியம் செய்து கொடுத்தோம்.

எங்களை திருத்துவதற்காக, தனக்கு பிடிக்காத புகைப்பழக்கத்தை தொட்ட ஆசிரியர், அதற்குப் பின், அந்த சிகரெட்டை தொடவே இல்லை; நாங்களும் தொடவில்லை என்பது நிஜம்!

–- அ.ராஜா ரஹ்மான், தேனி.