அன்புடன் பேசி...

பதிவு செய்த நாள் : 17 மே 2019

என் வயது, 78; மானாமதுரையில், 1948ல், எஸ்.என்.எஸ். பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தேன்.

தப்பாக கணக்கு போட்டதற்காக, வகுப்பாசிரியர் துரை, சவுக்கு குச்சியால், பலமுறை அடித்தார்.

என் உடலில், தடிப்பும், காயமும் ஏற்பட, பள்ளிக்கு வந்து, ஆசிரியரிடம் சண்டை போட்டனர் பெற்றோர்.

அதன்பின், அந்த பள்ளியில் படித்தவரை, அந்த ஆசிரியர் என்னிடம் பேசுவதில்லை.

பல ஆண்டுகளுக்குப் பின், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில், கணக்காளராக பணியாற்றினேன்.

அப்போது, ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, சம்பள காசோலை, ஊராட்சி ஒன்றியத்திலிருந்து வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர்கள், கணக்காளராகிய என்னிடம், காசோலை பெற்றுச் செல்வர்.

அப்போது, என்னை அடித்து காயப்படுத்திய, ஆசிரியர் துரை, தலைமை ஆசிரியராக, காசோலை பெற வந்த போது, மிகுந்த தயக்கத்துடன் என்னை அனுகினார். ஆனால், அவரிடம் அன்புடன் பேசி, காசோலையை வழங்கினேன். மிகுந்த நெகிழ்ச்சியுடன், கண்ணில் நீர் கசிய, காசோலையை பெற்றார்; இந்நிகழ்வு, எனக்கு அழியாத நினைவாக உள்ளது.

–- ஆர்.முத்துக்குமார், மதுரை.