வேட்டைகாரன்!

பதிவு செய்த நாள் : 17 மே 2019

வீரண்ணா வேட்டைக்காரன். இரவு நேரங்களில், மான்களைச் சுட்டு, அதன் மாமிசம், தோல், கொம்பு போன்றவற்றை, நல்ல விலைக்கு விற்று விடுவான்.

வாய்ப்பு கிடைத்தால், யானைகளை கொன்று, தந்தங்களை மேல் நாட்டு வியாபாரிகளிடம், நல்ல விலைக்கு விற்று விடுவான்.

வேட்டையாடுவது அவனது முக்கிய தொழில்; காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, சட்டப்படி குற்றம் என்று தெரியும்; கையூட்டு கொடுத்து, காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

காட்டின் எல்லா பகுதிகளும், அவனுக்கு அத்துப்படி; எந்த மிருகம், எந்த இடத்தில் இருக்கும் என்று, தெரியும்; குறிபார்த்துச் சுடுவதில் பலே கில்லாடி.

ஒரு சமயம் -

ஒரு சமூக சேவகர், இவன் வேட்டையாடுவதை, காவல்துறைக்குச் சொல்லி விட்டார். விசாரணை நடத்தினர்; வழக்கம் போல் சமாளித்து தப்பித்து விட்டான்.

தன்னை காட்டிக் கொடுத்த சமூக சேவகரின் வீட்டிற்குச் சென்று, அவரது காலை உடைத்து விட்டான் வீரண்ணா.

அதனால், ஊர் மக்கள் இவனுக்குப் பயப்படுவர்; யாராவது, எதிர்த்துப் பேசினால், துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டுவான்.

மூத்த மகன் ஊமை; இரண்டாவது மகன் பாம்பு கடித்து இறந்து விட்டான்; மூன்றாவது மகன், வாசன், 8ம் வகுப்பு படிக்கிறான்.

'வேட்டையாடுவதை விட்டு விடுங்கள்...' என்று மனைவி கவிதா எவ்வளவோ கூறியும், அவன் கேட்கவில்லை.

அடிக்கடி, நண்பர்களை வீட்டிற்கு அழைத்து, அரட்டை அடித்தபடியே இருப்பான்.

தந்தையைப் போல், மூர்க்கக் குணம் உடையவன் இல்லை வாசன் ; எல்லா உயிர்களையும், தன்னுயிர் போல நேசிப்பவன்.

ஒரு நாள் -

வாசனின் வகுப்பு ஆசிரியர், காட்டு விலங்குகள் பற்றிப் பாடம் நடத்தினார்.

'மனிதன் சுயநலத்திற்காக, கண் மூடித்தனமாகக் காட்டு விலங்குகளைக் கொல்கிறான்; நுாற்றுக்கணக்கான விலங்கு, பறவை இனங்களும் அழிந்து விட்டன; யானைகள் கூட, எண்ணிக்கையில் குறைந்து விட்டன. இதே நிலையில் சென்றால், இந்தியாவில் யானைகளே இருக்காது...' என்று ஆசிரியர் பாடம் நடத்தியது, வாசனின் உள் மனதை தொட்டது.

''சார்... யானைக் கறியை மனிதர்கள் சாப்பிடுவார்களா...'' ஒரு மாணவன் கேட்டான்.

''சாப்பிட மாட்டார்கள்...''

''பின் ஏன், யானையைக் கொல்கின்றனர்...''

''அதன் தந்தம், விலை மதிப்பற்றது; 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்...' என்று கூறுவர்.''

வாசனுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், தந்தை எடுத்து வந்த யானைத் தந்தங்கள் ஞாபகத்திற்கு வந்தது. அவை, வெள்ளையாய், பெரிதாய், கனமாய் இருந்தன.

இரண்டு நாட்களுக்கு முன், நண்பர் களிடம் பேசிக் கொண்டிருந்தான் வீரண்ணா.

'நம்ம மும்பை சேட் தன்வந்த், 10ம் தேதி இங்கே வர்றதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். நம்ம யானை தந்தம், நல்ல விலைக்கு போகும். அதை விற்ற உடனே, உங்க பங்கு தொகை, 10 ஆயிரத்தை தந்திடறேன்...'

'சரி தலைவரே... ரொம்ப ஜாக்கிரதையா எடுத்துப் போகச் சொல்லுங்க; இடையில மாட்டிக் கிட்டா, எல்லாரும் பிடி படுவோம்...'

'கடத்தலில் பலே கில்லாடி; அவனுக்குச் சொல்லியா தரணும்...'

அன்று அமாவாசை இரவு -

சரியாக, 12:00 மணி; மும்பை சேட் தன்வந்த், லாரி நிறைய விறகுகளுடன் வந்தான்.

யானைத் தந்தம் பேரம் நடந்தது.

கட்டுக் கட்டாக, நோட்டுக்களை வாங்கி கொண்டு, யானைத் தந்தங்களைக் கொடுத்தார், வீரண்ணா.

பதுங்கி இருந்த காவல்துறையினர், 'குபீர்...'ரென்று வெளிப்பட்டனர்.

'படா...'ரென்று யானைத் தந்தங்களை, சாக்குப் பை போட்டு மூடினர்.

''என்ன வியாபாரம் செய்றீங்க...'' என்றார், ஆய்வாளர்.

''ஒண்ணுமில்ல சார்... சேட் நம்ம நீண்ட கால நண்பர்; புதுச்சேரிக்கு விறகு ஏத்திட்டுப் போறார்; வழியில, என்னைப் பார்த்திட்டுப் போக வந்திருக்கிறார்...''

''அது சரி இது என்ன...'' கோணிப் பைகளைத் துாக்கினார், ஆய்வாளர்.

''இது, யானை தந்தம் சார்; ஒருவர் சேட்டுக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்...''

''யார் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தது... சொல்லுங்க... இல்லாட்டி, உங்க மேலே குற்றம் சாத்த வேண்டியிருக்கும்...'' மிரட்டினார், ஆய்வாளர்.

''சார்... சார்... என்ன விட்டிருங்க; இவர்கிட்ட இருந்துதான், ௮௦ ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன்...''

''காட்டு விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்; விலங்குகளின் உறுப்புக்களை விலை கொடுத்து வாங்குவதும் குற்றம்...'' என்றவாறே, இருவருக்கும் விலங்கு மாட்டினார், ஆய்வாளர்.

'இந்த யானைத் தந்தம் காவல் துறையினரின் பாதுகாப்பிற்குப் போக வேண்டும்; தந்தையின், வேட்டையாடும், சட்ட விரோதச் செயலை தொடர விடக் கூடாது; அவருக்கு, தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்' என்று வாசன் நினைத்ததன் விளைவு தான் இது!

குட்டீஸ்... காட்டு விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டும்; விலங்குகளை கொன்று, பணம் சாம்பதிக்கும் கயவர்கள், சமூக விரோதிகளை ஒடுக்க, வாசன் போன்ற மாணவர்கள் தான், நம் நாட்டிற்குத் தேவை!

–- பேராசிரியர் அருள்நம்பி,

கார்த்திக் பதிப்பகம்.