ராசுவின் வெற்றி!

பதிவு செய்த நாள் : 17 மே 2019

கிழக்கு மலைத்தொடரின் அருகே, இருந்தது வயலுார் கிராமம். அங்கு, கருத்தப்பன் என்ற விறகு வெட்டி வாழ்ந்து வந்தார்.

அவருக்கு, ராசு என்ற மகன் இருந்தான்; வாலிப வயதை அடைந்ததும், 'இனிமேல் தந்தையை விறகு வெட்ட அனுப்பக் கூடாது' என்று முடிவு செய்தான்.

ஒரு நாள் -

ராசுவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

'தந்தையே... நீங்கள் வீட்டில் ஓய்வெடுங்கள்; நான் விறகு வெட்டி வருகிறேன்...' என்று, மலைப்பகுதியில் இருந்த காட்டை நோக்கி நடந்தான்.

சிறிது துாரம் சென்றதும், பயங்கரமான சிரிப்பொலி கேட்பதை பார்த்து திடுக்கிட்டான். இருந்தாலும், மனத்திற்குள், தைரியத்தை வரவழைத்து சுற்றிலும் பார்த்தான்.

ராசுவின் எதிரே, கரடு, முரடான உருவத்தில் அரக்கன் ஒருவன் நின்றான். அவனைப் பார்த்தவுடன், ராசுவின், கை, கால்கள் நடுங்கத் துவங்கின.

'இந்த அரக்கனால், பேராபத்து ஏற்படக் கூடும்; இவனிடம் புத்திசாலித்தனமாக நடந்து, தப்பிக்க வேண்டும்' என, முடிவுச் செய்தான்.

'அரக்கனே... நீ பலமாகத்தான் சிரிக்கிறாய்; ஆனால், உன்னைப் பார்க்கும் போது, பரிதாபம் தான் ஏற்படுகிறது...' என்றான்.

'இளைஞனே... நீ என்னைக் கண்டு பயப்படாமல், பரிதாப்படுவதற்கு என்ன காரணமோ...' என்று கேட்டான்.

'அரக்கனே... இந்த காட்டின் நுழைவுப் பகுதியில், பலம் மிக்க ரிஷிகள் ஏராளமான பேர் உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, உன்னைக் கொல்ல, பெரும் யாகம் ஒன்றை வருகிற பவுர்ணமி அன்று, நடத்தப் போகின்றனர்.

'யாகத்திற்காக, ஐவரல்லி மரத்தை வெட்டித் தரும்படி என்னிடம் கேட்டனர். அப்போது தான், உன் மரணம் பற்றிய செய்தி, அறிந்தேன்...' என்றான்.

ராசுவின் பேச்சை அப்படியே நம்பி விட்டான், அரக்கன்.

பலம் பொருந்திய ரிஷிகளைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறான்; அதனால், கை, கால்கள் நடுங்கத் துவங்கின.

'இளைஞனே... காட்டில் மனிதர்கள் வந்தால், பிடித்து தின்னலாம் என்று வந்தேன். நல்ல வேளையாக உன்னை பிடித்து தின்னவில்லை. அப்படி தின்றிருந்தால், எனக்கு வரப்போகிற பேராபத்தை அறிந்திருக்க முடியாது.

'இனி, நான் இந்த காட்டில் வசிக்க மாட்டேன்; வேறு எங்காவது ஓடி விடுகிறேன்; என் உயிருக்கு வந்த பேராபத்தை தெரியப்படுத்தியதால், பல நாட்களாக பாதுகாத்து வந்த, முத்து மாலையை, உனக்குப் பரிசாக தருகிறேன்; இதோ வாங்கிக் கொள்...' என்று, கொடுத்தான், அரக்கன்.

விலை மதிப்பற்ற அந்த முத்து மாலையை ராசு வாங்கியவுடன், மின்னல் வேகத்தில், அந்தக் காட்டை விட்டு வெளியேறினான் அரக்கன்.

தனக்குக் கிடைத்த பரிசை பார்த்து, மகிழ்ச்சியடைந்தான் ராசு.

வெட்டி வந்த விறகுகளை, வீட்டிற்குள், அடுக்கி வைத்தான். அவனின் செயல் கண்டு திகைப்படைந்தார் ராசுவின் தந்தை.

முத்து மாலையைக் காட்டி, காட்டில் நடந்ததை தந்தையிடம் கூறினான்.

மகனின் புத்தி சாதுர்யத்தைப் பாராட்டினார்.

'தந்தையே... இனிமேல், உங்களை வறுமையுடன் வாழ விட மாட்டேன். என் வாழ்க்கையில், ஒரு நிமிடத்தைக் கூட, வீணாக்காமல் செல்வங்களை சேர்ப்பேன்.

'இந்த ஊரில், நாம் பெரும் செல்வந்தராக வாழ வேண்டும். நம்மால் முடிந்த வரையில், எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்...' என்றான்.

'மகனே... உன் பேச்சைக் கேட்க, மிகவும் நன்றாகத் தான் இருக்கிறது; நீ வெட்டி வந்த விறகுகளை எல்லாம் எதற்காக, சேமித்து வைக்கிறாய்...' என்றார்.

'தந்தையே... இப்போது விறகுளை விற்பனை செய்தால், சொற்ப விலைக்குத்தான் விற்க முடியும்; மழைக் காலத்தில், விற்பனை செய்தால், இதை விட, இரு மடங்கு விலைக்கு விற்கலாம். அப்போது, நமக்கு அதிமாக பணம் கிடைக்கும்; அதற்காகத்தான், இந்த முன்னேற்பாட்டை செய்கிறேன்...' என்றான், ராசு.

அதை கேட்ட தந்தை, மகிழ்ச்சியடைந்தார்.

ராசு கூறியதைப் போன்று, மழைக் காலத்தில் விறகுகள் எல்லாம் அமோகமாக விற்பனையாகி, இரு மடங்கு பணம் கிடைத்தது.

'இந்த பணத்தை வைத்து, ஏதாவது தொழில் செய்தால் என்ன' என்று தோன்றியது ராசுவுக்கு.

' தந்தையே, விறகு விற்ற பணம் பெரும் தொகையாக உள்ளது. அதை வைத்து, ஏதாவது தொழில் துவங்க நினைக்கிறேன்; ஆலோசனை சொல்லுங்கள்...' என்றான் ராசு.

'மகனே... நம் ஊரில், மளிகை கடைகள் கிடையாது; மளிகைப் பொருட்களை வாங்க, பக்கத்து ஊருக்குச் செல்ல நேரிடுகிறது. எனவே, மளிகைக்கடை நடத்தினால், நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும்...' என்றார் தந்தை.

ஓரிரு வாரங்களில், மளிகைக் கடை வைத்தான் ராசு.

அமோகமாக வியாபாரம் நடந்தது.

குறுகிய காலத்திலேயே, பெரும் பணத்தைச் சேர்த்து விட்டான் ராசு.

'தந்தையே... உங்கள் அறிவுரைப்படி நடந்ததால், நல்ல பலன் கிடைத்தது; அந்த பலனை, இருமடங்காகப் பெருக்கிக் கொள்ள என்ன செய்யலாம்...' என்று கேட்டான், ராசு.

'மகனே... தொழில் செய்து, மேலும் மேலும் உயர வேண்டும் என்ற உன் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதற்காக, உன்னை பாராட்டுகிறேன்.

'இப்போது, வெயில் காலம்...

நம் கிராமத்தை ஒட்டியுள்ள நகரத்திற்குச் செல்; மக்கள் அதிகமாக கூடுகிற இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தில், குளிர்பானக் கடை ஒன்றை நடத்து.

'நல்ல, தரமான குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் ஓரளவுக்குக் குறைந்த விலையில், விற்பனை செய். நிச்சயமாக, நல்ல லாபம் கிடைக்கும்...' என்றார்.

தந்தையின் அறிவுரைப்படியே, குளிர்பானக் கடையை துவங்கினான், ராசு. வியாபாரம், வெகு சிறப்பாக நடை பெற்றது; ராசுவின் செல்வம் மேலும் பெருகியது.

'தந்தையே... உங்களின் அறிவுரையால் தான், எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. தங்களின் சொல்லுக்கு மாபெரும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டேன்...' என்றான்.

'மகனே... என்னுடைய அறிவுரை ஒரு பக்கம் இருந்தாலும், உன்னுடைய புத்திசாலித்தனத்தால் தான், இந்த அளவுக்கு வெற்றி அடைந்தாய்...' என்று, பாராட்டினார்.

ராசு அந்த ஊரிலேயே பெரும் பணக்காரனாகி, ஏழைகளுக்கு உதவி செய்து, தந்தையை நன்றாக கவனித்து, பலருக்கு முன் மாதிரியாக வாழ்ந்தான்.

குட்டீஸ்... தகப்பன் பேச்சைக் கேட்டு, புத்திசாலித்தனமாக நடந்ததால் தான், ராசு பெரிய பணக்காரன் ஆனான். நீங்களும், பெற்றோர் பேச்சை கேட்டு வளமாக வாழுங்க!