ஒரு கிலோ வெங்காயம் மூன்றாயிரம்!

பதிவு செய்த நாள் : 17 மே 2019

சுவைக்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்கும் வெங்காயம் நல்லது என்பதால், உணவில் முக்கியமாக சேர்க்கப்படுகிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் என, இரண்டு ரகத்தை பயன்படுத்துகிறோம்.

ஒரு கிலோ வெங்காயம், 15 ரூபாய்க்கு கிடைக்கும்; சில நேரங்களில், 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகும்.

இமயமலையில் மட்டுமே விளையும் வெங்காயம், ஒரு கிலோ, 3,000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

இந்த வெங்கா யம், அழகிய, நீல நிறப் பூக்களு டன் கிடைக்கிறது; கடல் மட்டத்தில், 7 ஆயிரம் அடியில் இருந்து, 16 ஆயிரம் அடி உயரம் உள்ள பகுதிகளில், விளைகிறது.

நம்மூரில் கிடைக்கும் சிறிய வெங்காயத்தை விட, மிக மிக அளவில் சிறியதாக இருக்கும்; முழுவதும், மருத்துவ குணம் உள்ளது. வசதியானவர்கள், உணவிலும், நோயாளிகள் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

செயற்கையாக வளர்ப்பதை விட, இயற்கையாக வளர்ந்த பகுதிகளில் தான், இந்த வெங்காயத்தை பெற முடியும்.

இந்த வெங்காயத்தை பயன்படுத்தினால், சளி, ஜலதோஷம் நீங்கும்.

எந்த நோய் பாதிப்பாக இருந்தாலும், இந்த வெங்காயத்தை உண்பதன் மூலம், புத்துணர்ச்சி கிடைக்கும்.

'இந்த வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், கை, கால் வலியில்லாமல், தொடர்ந்து நடக்க முடியும்...' என்கின்றனர், இமயமலை வாசிகள்.