எல்­லாம் தெரிந்த ஏகாம்­ப­ரம்!

பதிவு செய்த நாள் : 17 மே 2019

கீ போர்டிலும் கிருமி இருக்கும்!

நாம், எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்...

சாப்பிடுவதற்கு முன், கழிப்பறையை பயன்படுத்திய பின், குப்பைகளை சுத்தம் செய்த பின், என, தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும் போது மட்டும், இப்படி செய்கிறோம்.

அதே நேரம், கணினியையோ, மொபைல் போனையோ பயன்படுத்திய பின், கைகளை கழுவுகிறோமா...

அதற்கும், சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையை விட, ஆறு மடங்கு அதிகமான கிருமிகள், தினமும் பயன்படுத்தும் கணினியிலும், மொபைல் போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கணினி கீ போர்டில், பாக்டீரியா இருப்பதே தெரியாமல், அதன் மீது விரல்களை, நடனமாட விடுகிறோம். பின், அதே கையுடன், மொபைல் போனை எடுத்து பேசுவோம்; கண்ணை கசக்குவோம்.

சில சமயங்களில், 'கணினியில் தானே வேலை பார்க்கிறோம்' என்று, அசட்டையாக, கை கழுவாமல், சாப்பிடுவோம். அப்போது, கீ போர்டில் இருக்கும், கிருமிகள், நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையை காட்ட துவங்கி விடும்.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள, லண்டனில், ஒரு அலுவலகத்தில் இருந்த, கீ போர்டுகளை பரிசோதனை செய்தனர். அதில், பெரும்பாலான கீ போர்டுகள், பயன்பாட்டுக்கு, தகுதி இல்லாத, கிருமிகளின் கூடாராமாக இருந்துள்ளது.

தனி நபர் சுத்தத்தைப் பொறுத்தே, கணினியில் கிருமிகள் சேர்வதும் அமைகிறது.

சிலர், கணினியின் முன் அமர்ந்து, கைக்குட்டையால், முகத்தை மூடாமல், இருமுவதும், தும்முவதும் சகஜம்; இதுபோன்ற பழக்கங்களாலும், கீ போர்டில் கிருமிகள் பெருகும்.

அலுவலகத்தில், யாருக்காவது, சளி, இரைப்பை குடல் அழற்சி வியாதி இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்ட், மவுசை நாம் பயன்படுத்தினால், அவருடைய நோய்கள் நமக்கும் எளிதாக தொற்ற வாய்ப்புள்ளது.

எத்தனை பேர் கணினியையும், மவுசையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம். கீ போர்டில் துாசுப்படலம் பரவினாலும், சுத்தம் செய்யாமல், 'அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்ற மனநிலை தான் பலருக்கும் உள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளியில், கீ போர்டு, மவுஸ், மொபைல் போன் போன்றவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

கீ போர்டை, தலைகீழாக கவிழ்த்து, மெதுவாக தட்டி, சிக்கியிருக்கும் உணவு துணுக்குகள், சிறிய குப்பைகளை அகற்ற வேண்டும். மெல்லிய துணியின் மூலம், இவற்றை துடைத்தெடுக்கலாம்.

சுத்தம் சோறு போடும். அசுத்தம் ஆரோக்கிய கேட்டை தரும். அதன்பின், சோற்றை பிடுங்கி, மாத்திரையை விழுங்க செய்யும்!