டில்லியில் மே 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: சோனியா காந்தி அழைப்பு

பதிவு செய்த நாள் : 15 மே 2019 14:29

புதுடில்லி

மே 23ம் தேதி டில்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு மொத்தம் உள்ள 543 இடங்களில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளுக்கு மே 19ம் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது. மே 23ம் தேதி 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பாஜக மீண்டும் ஆட்சியில் அமருமா? அல்லது வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்பது மே 23ம் தேதி மதியம் தெரியவரும்.

ஆரம்பத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல்கள் வெளியாகின. ஆனால் 4வது கட்ட தேர்தலுக்குப் பிறகு அரசியல் வட்டாரத்தில் மாநில கட்சிகளின் கை தான், ஓங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு அதிக இடங்கள் கிடைக்காது. எனவே மாநில கட்சிகள் உதவியுடன்தான் புதிய ஆட்சி அமைக்கமுடியும் சூழல் நிலவி வருகிறது.

மாநிலக் கட்சிகளில் திமுக, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

சிவசேனா, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் ஆகிய கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன.

இடது சாரிகள் தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட சுமார் 20 மாநில கட்சிகள் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்துள்ளன. இந்த கட்சிகள்தான் மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கர்களாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் 23ம் தேதி தேர்தல் முடிவுக்கு முன்னதாக 21ம் தேதியே டில்லியில் மாநில கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இதற்கிடையே தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், மாநில கட்சிகளின் “கூட்டாட்சி முன்னணி” தான் மத்தியில் புதிய ஆட்சியை அமைக்கவேண்டும் என்று முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாஜக, காங்கிரஸ் இல்லாத புதிய ஆட்சியை உருவாக்கவேண்டும் என்பது அவரது லட்சியமாக உள்ளது.

ஆனால் நேற்று சந்திரசேகர ராவும், சில மாநில கட்சித் தலைவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் காங்கிரசின் ஆதரவை வெளியில் இருந்து பெறலாம் என்பதே அந்த முக்கிய முடிவாகும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சியும் மும்முரமாகி உள்ளது. ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத், கமல்நாத் போன்றவர்கள் மாநில கட்சித் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பேச்சு நடத்தி வருகிறார்கள்.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பாஜக பக்கம் செல்லாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் சோனியா காந்தி ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

”டில்லியில் வரும் மே 23ம் தேதி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அதில், அவசியம் கலந்துகொள்ள  வேண்டுகிறேன்” என்று அந்த அழைப்பில் சோனியா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சோனியாவின் அழைப்பு கடிதம், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.