திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 15 மே 2019 13:07

மதுரை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி தாக்கலான மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதால் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் வருகிற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் தங்களின் பலத்தை நிரூபிக்க பணம் கொடுத்து மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். இதற்காக மட்டும் முக்கிய கட்சிகள் இதுவரை 25 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக திமுக, அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வாக்கு ஒன்றுக்கு 1000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இத்தகையச் சூழலில் கட்சியினர் தேர்தல் செலவு கணக்கை பொய்யாக தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர். தேர்தல் ஆணையமும் கண்மூடித்தனமாக அதனை ஏற்றுக் கொள்கிறது.

வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரிய மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.