நிலவுக்கு பெண்ணை அனுப்பும் அமெரிக்க விண்வெளித் திட்டத்துக்கு `அப்பல்லோ’வின் சகோதரி `ஆர்த்தெமிஸ்’ பெயர்

பதிவு செய்த நாள் : 14 மே 2019 18:44

வாஷிங்டன்,

  2024-ல், நிலவுக்கு முதன் முதலாக ஒரு பெண்ணை அனுப்பும் அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்துக்கு `ஆர்த்தெமிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிரேக்கப் பழங்கதைகளில் வரும் பெண் தெய்வம் ஆர்த்தெமிஸ். சியுஸ், லெடோ ஆகியோரின் மகள். சூரியக் கடவுளான அப்பல்லோவின் சகோதரி. அப்பல்லோவும் ஆர்த்தெமிஸும் ஒன்றாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என கிரேக்கப் புராணம் கூறுகிறது.

நிலவு, வேட்டையாடுதல், காட்டு விலங்குகள், கன்னித் தன்மை, குழந்தைப் பிறப்பு ஆகியவற்றுக்கான பெண் தெய்வமாக ஆர்த்தெமிஸ் கருதப்படுகிறார்.  கையில் வில், அம்பு ஏந்திய வேட்டைக்காரியாக இவர் சித்தரிக்கப்படுகிறார்.

கடந்த 1969-ல் இருந்து 1972 வரை 12 அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய அப்பல்லோ விண்வெளித் திட்டம் முடிவுக்கு வந்ததற்குப் பின்னால், அடுத்து துவங்க இருக்கும் விண்வெளித் திட்டத்துக்கு அப்பல்லோவின் சகோதரியாக கருதப்படும் ஆர்த்தெமிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நிலவுக்கு  பெண்ணை அனுப்பும் இந்த திட்டத்துக்கு கூடுதலாக 160 கோடி டாலர் தேவைப்படும் என்று அமெரிக்காவின் `நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜிம் பிரைடன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.