ஜி20 மாநாட்டில் சீனா, ரஷ்யா அதிபர்களுடன் பேச்சுவார்த்தை: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 மே 2019 18:39

வாஷிங்டன்,

  சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இருவரையும் வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சந்திக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் கடந்த வாரம் முதல் மீண்டும் தீவிரமடைந்தது. இருதரப்பினரும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அமெரிக்கா கடந்த வாரம் சீனாவின் 20,000 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது. மேலும் 30,000 கோடி டாலர் மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு பதிலடியாக நேற்று சீனா 6000 கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு சீனா உடன்படவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் ஜப்பானில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் பேசுகையில்

‘‘வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடக்கபோகும் ஜி 20 மாநாட்டில் அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறேன். அவருடனான எனது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் அதே மாநாட்டில் தான் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினையும் சந்திக்கப் போவதாக டிரம்ப் கூறினார்.

‘‘இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபர்களும் ரஷ்யா மீது இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டது கிடையாது. அதே சமயம் ரஷ்யாவுடன் நட்புறவு ஏற்படுத்தி கொள்ளவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்று டிரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த ஜி20 மாநாட்டில் சீனா – அமெரிக்கா அதிபர்கள் சந்தித்து பேசினர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தான் இருதலைவர்களும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்தனர்.

அதன் காரணமாக அமெரிக்கா - சீனா வர்த்தக போர் தற்காலிகமாக நிறுத்திகொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.