ஜி.கே.வி., சொன்னதால்தான் இளையராஜா இசையமைத்தார்!
‘16 வயதினிலே’ கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் முடிவானது. இசை யார் என்று ராஜ்கண்ணு கேட்க, இளையராஜாதான் என்று பாரதிராஜா சொல்லியிருக்கிறார். ஆனால் இளையராஜா இசையமைக்க மறுத்து விட்டார். காரணம், பாரதிராஜா உதவி இயக்குனராகவும், இளையராஜா ஜி.கே.வி.யிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் பாரதிராஜாவும் இளையராஜாவிடம் ஒரு பந்தயம் போட்டிருக்கிறார்.
“இப்படி எல்லோருடைய இசைக்குழுவிலும், கிடார் வாசிக்கக் கூப்பிடுகிறார்கள், கோம்போ வாசிக்கக் கூப்பிடுகிறார்கள் என்று போய்க்கொண்டிருந்தால் எப்போதுதான் இசையமைப்பாளர் ஆவது? நீ வேணா பார், நான் ஒரு இருபது இருபத்தைந்து படங்கள் எடுத்தபின் போனால் போகுது ஒரு படத்திற்கு உன்னை இசையமைக்கச் சொல்லலாம் என்று இசையமைப்பாளர் ஆக்கினால்தான் உண்டு” என்று. அதற்கு இளையராஜா, “முதலில் ஜி.கே.வி உன் படத்திற்கு இசையமைக்க வேண்டும், அதன்பின்தான் உன் படத்திற்கு நான் இசையமைப்பேன். அதுவும் ஜி.கே.வி. என்னிடம் வந்து போனால் போகுது இவன் படத்திற்கு நீ இசையமை என்று சொன்னால் மட்டுமே இசையமைப்பேன்” என்றார்.
பாரதிராஜா ஒருவேளை இதை மறந்திருக்கலாம். அதனால்தான் ‘16 வயதினிலே’ படத்திற்கு யார் என்று கேட்டதும் இளையராஜாதான் என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வி. வந்து சொன்ன பிறகுதான் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவே ஒப்புக்கொண்டார்.
‘16 வயதினிலே’ படத்தின் உண்மையான கதை, மயிலு, டாக்டர் கதாபாத்திரத்திடம் கெட்டுப் போவது போலவும் இறுதியில் இப்போது உள்ளதுபோல சப்பாணிக்காகக் காத்திருப்பது போலவும் தான் பாரதிராஜா கதை விவாதத்தின்போது சொன்னது. ஆனால் கெட்டுப்போவது போல் இருந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது என்றும் இப்போது உள்ள கதையமைப்பைச் சொன்னதும் பாக்யராஜ்தான்.
‘16 வயதினிலே’ படத்தைப் பார்த்து இளையராஜா சொன்னது… ‘‘பாரதிக்குள் இப்படி ஒரு கலைஞன் இருக்கிறானா, கூடவேதான் இருந்தோம், ஒன்றாக வளர்ந்தோம், ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருப்பதைப் பார்த்து வியந்து போனேன். இந்த படம் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைத்த இசை பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு நமது பாணியை மாற்றவேண்டும் என்று தோண வைத்தது. இந்த படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது. இந்த படத்தில் இருந்துதான் பின்னணி இசை பற்றிய எனது அணுகுமுறை மாறியது. அடுத்த சாதாரண படங்களில்கூட வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையைக் கொடுத்துப்பார்க்க வித்திட்டது.’’
இந்த படத்தின் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இளையராஜா விளையாடியிருப்பார். இந்த படத்தில் வரும் ‘‘செந்தூரப்பூவே’’ பாடலுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கங்கை அமரன் எழுதிய இந்த பாடலைப் பாடிய ஜானகிக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த பாடல். கங்கை அமரன் திரைப்பட பாடலாசிரியர் ஆனதும் இந்த பாடலால்தான்.
இந்த படத்தில்தான் இளையராஜா முதல் முறையாக ஒரு முழுப்பாடலைப் பாடியிருக்கிறார். “பாடல் –சோளம் விதைக்கயிலே சொல்லிப்புட்டு போனபுள்ள“. ‘அன்னக்கிளி’யின் கிராமிய மணமுள்ள பாடல்களாகட்டும், ‘பத்ரகாளி’ பட மெல்லிசை கோலங்களாகட்டும், ‘16 வயதினிலே’ இதற்கு முந்தைய காலகட்ட இசையமைப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இசையாக எனக்கு கேட்கத் தோன்றுகிறது. இந்த காலகட்டத்தில் இருந்துதான் திரை உலகில் பெரிய மாறுதல்கள் தோன்றின.
15.9.77 அன்று ‘16 வயதினிலே’ படம் வெளியானது. கமல்ஹாசனின் உதவியாளரான சேசு என்பவர் படத்தை பார்த்துவிட்டு சொன்னது…
‘‘இந்த படம் ஒரு வாரம்தான் ஓடும், மிட்லண்ட் தியேட்டரில் படம் பார்க்கும் ஜனங்கள் கிண்டல் செய்கிறார்கள். இதுபோதாதென்று டைட்டிலிலேயே சினிமாவிற்கு பொருத்தம் இல்லாத குரலில் இளையராஜா பாடியிருக்கிறார். இது ஜனங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.’’ (எத்தனையோ இதயங்களைக் கட்டிப்போடப்போகும் குரல் இது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.)
ஆனால் ஒரு இரும்புக்கதவை ஒரு சாதாரண சோளக்குச்சியால் தகர்த்த மாதிரியாகி விட்டது. படம் இமாலய வெற்றி பெற்றது. பாரதிராஜா என்ற அந்தக் கலைஞனும், இளையராஜாவும் இதற்கு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.