சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 392– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 15 மே 2019

நடிகர்கள் : விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன், சூரி, அப்புக்குட்டி, மற்றும் பலர்.

இசை : வி. செல்வகணேஷ், ஒளிப்பதிவு: லஷ்மண் குமார், எடிட்டிங் : மு. காசி விஸ்வநாதன், தயாரிப்பு : வி. ஆஷிஷ் ஜெயின், திரைக்கதை, இயக்கம் : ஸ்ரீ பாலாஜி.

கோயில் நகரமான மதுரையில் வாழ்ந்து வரும் எம்.பி.ஏ. பட்டதாரியான வெற்றிவேல் (விஷ்ணு விஷால்) வேலை கிடைக்காமல் சுற்றி வருகிறான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என அன்பான குடும்பத்தை சேர்ந்த வெற்றி அவர்களை நம்பியே வாழ்கிறான். ஒரு நாள் தனது போனிற்கு ரீசார்ஜ் செய்யச்சொல்லி அவரது தந்தை கொடுத்த பணத்திற்கு தவறுதலாக ப்ரியா (ரம்யா நம்பீசன்) என்ற பெண்ணின் போனிற்கு ரீசார்ஜ் செய்து விடுகிறான். ப்ரியாவிடமிருந்து அந்த பணத்தை திரும்ப வாங்குவதற்கான சந்திப்புகளில் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்குகிறார்கள்.

சப்இன்ஸ்பெக்டரான ப்ரியாவின் அப்பா ராணுவத்திலோ அல்லது போலீசிலோ வேலை பார்ப்பவருக்கே தனது மகளை திருமணம் செய்வேன் என்று கூறுகிறார். போலீசை வெறுக்கும் தனது அப்பாவிற்கு தெரியாமல் வெற்றியும் போலீஸ் பணிக்காக முயற்சிக்கிறான். அவனது அப்பாவிற்கு உண்மை தெரிந்ததும் குடும்பத்தாரின் விருப்பத்திற்காக சம்மதிக்கிறார். தனது மகனுக்கு ப்ரியாவை மணமுடிக்க நினைத்த ப்ரியா அப்பாவின் நண்பரான போலீஸ் தேர்வு அதிகாரிக்கு இதில் விருப்பமில்லை. போலீஸ் பணி தேர்வின் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்துகிறார். சில நியாயமான அதிகாரிகளால் வெற்றி பல சுற்றுகளில் ஜெயிக்கிறான். தேர்வின் போது வெற்றியைப் போலவே இந்த பணிக்காக போராடும் இளைஞர்களோடு நட்பாகிறான். தேர்வதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேண்டியவர்களை தேர்வு செய்கிறார்கள்.

தேர்வாகாத வெற்றியும், நண்பர்களும் தந்திரத்தால் அவர்களை வெல்ல முடிவு செய்கிறார்கள். தேர்வுக்குழுவில் உள்ளவர்களை ஒவ்வொருவராக கடத்தி மறைத்து வைக்கிறார்கள். வெற்றி அவர்களோடு பேசும்போது லஞ்சம் கொடுத்தவர்கள், இதற்கு உடந்தையாய் இருந்தவர்கள் என எல்லா விவரங்களும் வெளிவருகின்றன. உண்மையில் அவர்களை மறைத்து வைத்திருந்தது ஒரு நிகழ்ச்சி மேடை. மக்கள் முன்பும் உயரதிகாரிகள் முன்பும் உண்மை வெளிப்பட்டுவிட்டது. இறுதியில் நண்பர்கள் அனைவரும் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது கனவான போலீசாக பணி செய்கிறார்கள். வெற்றி காதலிலும் வாழ்க்கையிலும் ஜெயித்துவிட்டான்.