மான்சான்டோவின் களைக் கொல்லி மருந்தால் புற்றுநோய்: 200 கோடி டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

பதிவு செய்த நாள் : 14 மே 2019 17:51

சான் பிரான்சிஸ்கோ,

   மான்சான்டோ நிறுவனத்தின் ரவுண்டப் களைக் கொல்லி மருந்தால் தங்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக புகார் கூறி ஒரு தம்பதி தொடுத்த வழக்கில், அவர்களுக்கு அந்த நிறுவனம் 200 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலிபோர்னியா  நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

கிளைபாசேட்டை (glyphosate) அடிப்படையாகக் கொண்ட ரவுண்டப் களைக் கொல்லி மருந்துக்கும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை என மறுத்த போதிலும், இது மான்சான்டோவுக்கு கிடைத்த 3-வது நீதிமன்ற தோல்வி ஆகும்.

ஜெர்மனியின் பேயர் வேளாண் - ரசாயன குழுமத்தின் துணை கம்பெனி மான்சான்டோ என்பது குறிப்பிடத் தக்கது.

ரவுண்டப் களைக் கொல்லி மருந்தில் உள்ள ரசாயனப் பொருள்களால், விலங்கினங்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைப்பதற்காக, விஞ்ஞான உணமைகளைத் திரிப்பதிலும், ஊடகங்களையும், ஒழுங்குமுறை அமைப்புகளையும் வளைப்பதிலும் மான்சான்டோ என்னென்ன தில்லுமுல்லுகளைச் செய்திருக்கிறது என்பதற்கான ஏராளமான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதுதான் இத்தகையத் தீர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் என்று அந்த தம்பதியின் வழக்கறிஞரான பிரென்ட் விஸ்னர் குறிப்பிட்டார்.