அமெரிக்கா கையகப்படுத்திய சரக்கு கப்பலை திருப்பி தர வடகொரியா வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 14 மே 2019 17:18

சியோல்,

               அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்ட தங்கள் நாட்டு சரக்கு கப்பலை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமான திருட்டு என வடகொரியா சாடியுள்ளது.

வடகொரியா சட்டவிரோதமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் இந்த தடைகளை மீறி பல வடகொரியா கப்பல்கள் ரகசியமாக சரக்குகளைக் கொண்டுச் செல்கின்றன.

அவ்வாறு பொருளாதாரத் தடைகளை மீறி சரக்கு ஏற்றி சென்ற எம்/வி வைஸ் ஹானஸ்ட் என்ற வடகொரியா கப்பல் கடந்த ஆண்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு இந்தோனேசியாவில் சிறை வைக்கப்பட்டது.

தற்போது கப்பல் பிடிப்பட்டு ஒருவருடம் ஆன நிலையில் அந்த கப்பலை அமெரிக்கா தன் வசம் கையகப்படுத்தியுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது. பொருளாதார தடைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வடகொரியா கப்பலை அமெரிக்கா கையகப்படுத்துவது இதுவே முதல்முறை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இன்று வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்

‘‘அமெரிக்காவின் இந்த செயல் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜாங் உன் இடையே கடந்த ஆண்டு சிங்கபூரில் கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு எதிரானது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் பெயரில் அமெரிக்கா நடத்தும் சட்டவிரோதமான திருட்டு செயல் இது’’

‘‘இதுபோன்ற நடவடிக்கைகளால் வடகொரியாவை மண்டியிட வைக்க முடியும் என அமெரிக்கா நினைக்கிறது. ஒரு கொள்ளை கும்பல் போல் செயல்படும் அமெரிக்காவின் இத்தகைய செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய கடும் விளைவுகளைப் பற்றி அந்நாடு சிந்திக்க வேண்டும். உடனடியாக வடகொரியாவிடம் அதன் சரக்கு கப்பலை தாமதம் செய்யாமல் ஒப்படைக்க வேண்டும்’’ என்று வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா – வடகொரியா இடையே வியட்நாமில் பிப்ரவரி மாதம் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததில் இருந்து மீண்டும் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் வடகொரியா 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அதற்கு பதிலடியாக வடகொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்கா கையகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.