இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 தீவிரவாத அமைப்புக்களுக்கு தடை - அரசாணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 14 மே 2019 15:44

கொழும்பு,

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட  3 தீவிரவாத அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்காக, அரசாணை அடங்கிய தனி அரசிதழை  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா கையெழுத்திட்டு வெளியிட்டார்.

இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Thowheed Jamaath -NTJ), ஜமாத்தே மில்லாத்தே இப்ராகிம் (the Jamaathe Millaathe Ibrahim - JMI), வில்லாயத் அஸ் செயிலானி (Willayath As Seylani  -WAS) ஆகிய 3 அமைப்புகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, தேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்கள் மீது , தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 மனித வெடிகுண்டுகள் நடத்திய தாக்குதலில் 44 வெளிநாட்டவர்கள் உள்பட 258 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 10 பேர் இந்தியர்கள். 500 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கூறியது. ஆனால் உள்நாட்டு தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) அமைப்புதான் இதற்கு காரணம் என இலங்கை அரசு குற்றம்சாட்டியது.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு திங்கள்கிழமை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. வன்முறையை தூண்டிவிடும் செய்திகள் பரவாமல் தடுக் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், ஆளில்லாமல் இயக்கப்படும் விமானங்களுக்கும்,  ட்ரோன்கள் எனப்படும் வானூர்திகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மொத்தமுள்ள 2  கோடியே 10 லட்சம் மக்கள் தொகையில் சிங்கள –புத்த மதத்தினர்தான் பெரும்பான்மையினர். அடுத்த பெரியசிறுபான்மையினர் இந்துக்கள். அவர்களுக்கு அடுத்து இரண்டாவது பெரிய சிறுபான்மையினர் முஸ்லிம்கள். இவர்கள் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர். கிறித்தவர்கள் 7 சதவீதம் பேர்.