ஊரடங்கு உத்தரவையும் மீறி இலங்கையில் பல இடங்களில் வன்முறை, கலவரம்: ஒருவர் பலி

பதிவு செய்த நாள் : 14 மே 2019 15:12

கொழும்பு

   இலங்கையின் வட மேற்கு மாநிலத்தைச் சேர்ந்த குருனெகலா மாவட்டத்தில் பல கிராமங்களி்ல் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல மசூதிகள் சேதமடைந்தன.

இரண்டு பஸ்களில் வந்த வன்முறைக் கும்பல் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் அடித்து உடைக்கப்பட்டன, மசூதிகள் தாக்கப்பட்டன.

மரக்கடை நடத்தி வந்த, 45 வயது முஸ்லிம் ஒருவர் கத்திக் குத்து காயங்களால் இறந்தார்.

பஸ்களில் வந்து தாக்குதல் நடத்தியிருப்பது, இந்த தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன என்று  இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத் தலைவர் ஹில்மி அகமது கூறினார். ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போலவே இந்ததாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மகாசன் பாலகயா என்ற சிங்கள- புத்தமத அமைப்பைச் சேர்ந்த அமித் வீரசிங்கே, ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் என அழைத்துக் கொள்ளும் நமல்  குமாரா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசாரர் தெரிவித்தனர்.

கடந்த 2018 மார்ச்சில், மத்திய மாநிலத்தைச் சேர்ந்த தியாகனா என்ற இடத்தில், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மீது சிங்களக் கும்பல் நடத்திய வன்முறை தாக்குதலை தூண்டிவிட்டவர் என அமித் வீரசிங்கே கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்.

விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிலவரம் சிக்கலாகிவிடும் என்றும், இதுபோன்ற முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம்  கூறினார். இது போல கலவரம் ஏற்பட வேண்டும் என்றுதான் கிறித்தவ ஆலயங்களின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் விரும்பினார்கள் என்று அவர் எச்சரித்தார்.

வன்முறையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார். தேவாலயங்கள் மீது குண்டு வீசுகிற பயங்கரவாதத்துக்கும் சரி, மசூதிகளைத் தாக்கும் பயங்கரவாதத்துக்கும் சரி இலங்கையில் இடம் அளிக்கக் கூடாது என்றார்.