தகுதித் தேர்வுகளில் எந்த இடஒதுக்கீடும் இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

பதிவு செய்த நாள் : 13 மே 2019 19:41

புது டெல்லி.

``தகுதித் தேர்வுகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் இருக்க முடியாது’’ என்று  உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET), பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.
``தகுதித் தேர்வுகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் இருக்க முடியாது. இது முற்றிலும் தவறான கருத்து. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) என்பது ஆசிரியர் வேலையில் சேருவதற்கான தகுதியை அடைவதற்கான ஒரு தேர்வு மட்டுமே. இடஒதுக்கீடு என்பது, வேலையில் சேரும்போது மட்டுமே வரும்’’ என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

ஜூலை 7-ம் தேதி நடைபெற இருக்கும் சிடிஇடி தேர்வுக்கான அரசு அறிவிப்பு ஆணையை, மனுதாரர் ரஜ்னீஷ் குமார் பாண்டேயின் வழக்கறிஞர் குறிப்பட்டு பேசிய போது, அந்த அறிப்பு ஆணையில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் கூட எந்த இட ஒதுக்கீடும் இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.