தாமிரபரணி மகா தீபாராதனை நீராடி புண்ணியம் பெறுவோம்!

பதிவு செய்த நாள் : 14 மே 2019

புண்ணிய தீர்த்தங்கள் ஆடினால் விண்ணிலுள்ள கடவுளர்களாக எண்ணப்படுவர்.

புண்ணிய தீர்த்தங்கள் பொருந்தியாடினோர்

மண்ணிடைப் பறவைகள் விலங்கு மற்றுள

எண்ணுறும் யோனிகள் யாவமொய்திடார்

விண்ணிடைக் கடவுள ராகி மேவுவார்!

                - – காசிக்காண்டம் 6:14

மகா நதி :  பெருமை வாய்ந்த கங்கை நதி வடக்கு நோக்கி ஓடுவதால், கங்கை நதி பாயும் பகுதிகளில் பஞ்சமா பாதங்கள் பிரவேசிப்பது கிடையாது.  எனவே, மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வர்.  எல்லாருடைய பாவங்களைப் போக்கும் கங்கை நதி, தன்னுடைய பாவங்களைப் போக்கிக்கொள்வது தாமிரபரணி நதியில்தான்.  ஆண்டுதோறும் மார்கழி மாதம் தாமிரபரணி நதியில் பாவநாசத்தில் நீராடி கங்கை பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்கிறது.  வேறெந்த நதிகளிலும் இல்லாத சிறப்பாக தாமிரபரணியில் மொத்தம் 118 தீர்த்தங்களை அகத்தியர் ஏற்படுத்தியுள்ளார்.  இவற்றுள் 32 தீர்த்தங்கள் மலை மேல் உள்ளன.  இதில், இறவா வரம்பெற்ற மகரிஷிகள் நீராடி மகிழ்வர்.  மீதமுள்ள 86 தீர்த்தங்களும் சமவெளிப் பகுதியில் சாமானிய மனிதர்கள் நீராடுவதற்காக அமைந்துள்ளன.

தாமிரபரணி நதியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது.  ‘யாறும் குளமும் ஆடும்’ மரபினைச் சுட்டுகிறார் தொல்காப்பியர்.  தண்ணீர் எதையுமே தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது.  புனித நதிகள், கடல் நீர் ஒரு மனிதனின் எத்தகைய பாவங்களையும் போக்கவல்லது.  நீர் என்பது இறைத்தன்மை கொண்ட ஒரு பஞ்சபூதமாகக் கருதப்பட்டு, இறை வழிபாடுகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது.  

நீரைத் தெய்வமாக, பெண்ணாக, தாயாகச் சொல்கிறது ரிக் வேதம்.  கங்கை நதி -– ரிக் வேதத்தின் சின்னமாகவும், யமுனை நதி -– யஜுர் வேதத்தின் சின்னமாகவும், நர்மதை நதி –- சாம வேதத்தின் சின்னமாகவும் விளங்குகின்றன.  தாமிரபரணி – பராசக்தியின் வடிவமாக விளங்குகிறது.

மகாபுஷ்கரம் :  ‘புஷ்கரம்’ நீருக்குரிய விழா.  பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம், புஷ்கரம்.  குரு பகவான் கடுந்தவம் புரிந்து பிரம்மாவிடமிருந்து புஷ்கரத்தைப் பெற்றார்.  புஷ்கரம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் விழா.  மகா புஷ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகத்தான திருவிழா.  

நவகோள்களுள் ஒன்றான குரு, தன்னுடைய பெயர்ச்சியின்போது தன் ஆற்றலை தாமிரபரணி நதியின் மூலக்கூறுகளுடன் கலந்து, நீரின் மூலக்கூறு சக்தியை பன்மடங்காக்கும்.  மேலும், அப்போது புதிதாக, ஊற்றுநீர் தோன்றுகிறது.  இதனைக் கொண்டாடும் நிகழ்வே ‘மகாபுஷ்கரம்’.  இந்த சக்தியடைந்த மூலக்கூறுகள் கொண்ட தாமிரபரணி நதிநீர், நம் உடலையும் மனதையும் தோஷம் நீக்கி, புத்துணர்வு அடையச் செய்கிறது.  குரு பகவானின் அதிக ஆற்றல் நிறைந்துள்ள தாமிரபரணி, கோயிலின் கருவறையாக விளங்குகிறது.

நீர்நிலைகளைப் ‘புஷ்கரம்’ என்பர்.  புஷ்கரன் என்பது சமஸ்கிருதப் பெயர்.  தந்திலன் என்ற மகரிஷி சிவனை நோக்கித் தவம்புரிந்தார்.  தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், தன்னுடன் இருக்கும் அஷ்டமூர்த்திகளுள் ஒருவரான- நீரின் அதிபதியான ஜலமூர்த்தியை, தந்தில மகரிஷிக்கு வழங்கினார்.  நீரின் அதிபதியே கிடைத்ததால் மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதியானார் மகரிஷி.  தண்ணீர் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரம் என்பதால் எல்லா ஜீவராசிகளும் தந்தில மகரிஷியைப் போற்றித் துதித்தன.  வாழவைக்கும் சிறப்பானவர்களை சமஸ்கிருதத்தில் ‘புஷ்கரன்’ என்பர்.  எனவே, தந்தில மகரிஷி ‘புஷ்கரன்’ ஆனார்.  புஷ்கரனை தீர்த்த குரு, ஆதி குரு எனவும் அழைப்பர்.

மேன்மை தரும் விழா :  படைப்புக் கடவுளான பிரம்மா, ஜலதேவதைகள் தம்மிடம் இருப்பது சிறப்பு என்று அதைத் தருமாறு சிவனிடம் வேண்டினார்.  எம்பெருமானும் அதற்கிசைந்து, புஷ்கரனை அவரது அனுமதியுடன் பிரம்மாவுக்கு வழங்கினார்.  பிரம்மா வசமிருந்த புஷ்கரன், பிரம்மாவின் தீர்த்தக் கமண்டலத்தினுள் ஐக்கியமானார்.  ஒரு முறை தேவகுருவான பிரகஸ்பதி புஷ்கரனைக் கேட்டார், மறுத்தார் பிரம்மன்.  பின்பு பிரம்மா, புஷ்கரன், தேவகுரு மூவருக்குமிடையே சமரசம் ஏற்பட்டது.  அதன்படி, பிரகஸ்பதியான குரு பகவான் எந்த ராசிக்குள் பிரவேசிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரன் வாசம்செய்ய வேண்டும் என்று உடன்பாடு உண்டானது.  இவ்வாண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்.  எனவே, விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் 04.10.2018 முதல் 05.11.2019 வரை ஓராண்டுக்கு புஷ்கரன் வாசம் செய்து வருகிறார்.  புஷ்கரனை வரவேற்க மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், சப்தமகரிஷிகளும் தாமிரபரணியில் கூடியுள்ளனர்.  இந்த நேரத்தில் பிரம்ம கலசத்திலிருந்து வரும் நீர் கலப்பதாலும், குரு கோளின் அதீத தெய்வ சக்தி கலப்பதாலும் தாமிரபரணி, சகல தோஷங்களையும் போக்கி நம்மை புனிதப்படுத்தி, புத்துணர்வுடன் திகழவைக்கிறது.

மகா தீபாராதனை :  சிவபெருமானே தலைமைச் சித்தர்.  அவரின் சீடர்களுள் ஒருவரான அகத்திய மாமுனிவர் தோற்றுவித்ததே தாமிரபரணி.  வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தன்று தாமிரபரணி தோன்றியது.  எனவே, இந்த புஷ்கர ஆண்டு முழுவதும் விசாக நட்சத்திரம்தோறும், தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி எடுக்க முடிவானது.  ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று மாலையில் பாபநாசம் கோயில் முன்புள்ள படித்துறையில் தாமிரபரணி ஆரத்தி காண்பித்து, தாமிரபரணியை வணங்கி வருகின்றனர்.

அகத்தியரால் விருப்பப்பட்டு தோற்றுவிக்கப்பட்ட ஜீவநதியான தாமிரபரணியில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை (முகத்துவாரம்) மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன.  இந்த படித்துறைகள் அனைத்திலும், தாமிரபரணி ஆற்றின் ஜென்ம நட்சத்திரமான வரும் விசாக நாளில் வருகிற 18ம் தேதி சனிக்கிழமையன்று, மாலையில் தாமிரபரணி மகா தீப ஆரத்தி நடைபெற உள்ளது.  ஆகவே, மகாபுஷ்கரம் கொண்டாடிய நாட்களில் மட்டுமின்றி தீப ஆரத்தி நடைபெறும் தினங்களிலும், வைகாசி விசாகத்தன்றும் நீராடி பித்ருக்களையும் தெய்வங்களையும் ஆராதிப்பவர்கள் மகா புஷ்கர நீராடலின் பலனையும், நூறு அசுவமேத யாகங்களின் பலனையும் பெறுவர்.  தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறுவதற்காக குபேரன், தாமிரபரணியில் வைகாசி விசாகத்தன்று நீராடினான் என்கிறது புராணம்.  பின்னர் திருக்கோர் பெருமாளை வழிபட்டுச் செல்வங்களைப் பெற்றான்.  இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற இந்நாளில் (18ம் தேதி) தாமிரபரணியில் நீராடுவது வழக்கம்.

புது வாழ்வு :  மகாபுஷ்கரத்தில் நீராடி மகத்தான புண்ணியங்களைப் பெறுவதுடன், நதிக்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி, நவகயிலாயங்களை வழிபட்டு தொழில் முன்னேற்றம், மன அமைதி, மேன்மை பெறுவோம்.

அகத்திய மகரிஷி, மானுடர்கள் உய்வதற்காக ஏற்படுத்தித் தந்துள்ள இந்த தீர்த்தங்களில், இந்த மகாபுஷ்கர மகா தீபாராதனை நன்னாளில் இறையுணர்வுடன் நீராடி மகிழ்வோம், புண்ணியங்கள் பெறுவோம்.  நதிகளைப் போற்றி வழிபடுவோம், பிறவித் தழை நீக்குவோம், வாருங்கள்.  புஷ்கர நீராடலால் புது வாழ்வு பிறக்கும்!

-    – கீழப்பாவூர்  கி. ஸ்ரீமுருகன்