வைகாசி விசாகம் விழா ஏன்?

பதிவு செய்த நாள் : 14 மே 2019

வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் பவுர்ணமியாக விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு 'வைசாகம், வைகாசி' என பெயர் வந்தது. இந்த பவுர்ணமி நன்னாளை 'வைகாசி விசாகம்' என்று கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமான் அவதாரம் இந்நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.


அதிகாலை முதல் அபிஷேகம்!

கோடை காலமான வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால் காவடி, இளநீர்க்காவடி செலுத்துவது சிறப்பு. இளநீர், பாலாபிஷேகத்தால் தன் மனம் குளிரும் முருகன், பக்தர்கள் விரும்பும் வரங்களை வழங்குவார். தற்போது பால் காவடியாக இல்லாமல் குடத்தில் நிரப்பப்பட்டு, தலையில் சுமந்தபடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தில் அதிகாலை 5 முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம் நடக்கும்.