மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 153

பதிவு செய்த நாள் : 14 மே 2019

அங்கு வேதநெறியினின்றும் வழுவாத நல்லொழுக்கமுள்ள அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை  சாதியினரும் தத்தமது நிலைகளில் நிலைத்து வாழும் தன்மை பெற்றிருந்தனர்.  சேர மன்னர்களுக்கு கோதை என்ற பெயரும் உண்டு. அவர்கள் அரசு புரிந்து வந்த, மதிலும், மா, மகிழ், சரளம் முதலிய மரங்களும் சூழ்ந்த கொடுங்கோளூர் மகோதை என்ற பெயரும் பெற்று விளங்கியது.

 வளங்கள் மிகுந்த அந்த மகோதை நகரிலே, கலியை ஒழுக்கத்தினாலே ஒழித்து, அறத்தை நிலைநாட்டும் சைவத்திறம் தழைத்தோங்கும் பொருட்டு யானைப் படையுள்ள சேரர் குலமும் உலகமும் செய்த பெரும்  தவப்பயனால்   பெருமாக்கோதையார் – இவருக்கு கழறிற்றறிவார்,  சேரமான் பெருமான் என்ற பெயர்களும் உண்டு. இவர், யாவும், யாரும் கழறினவும் அறியவும் உணரவும் உடைமையால்  இப்பெயர் பெற்றார். அப்போது, அவர் பிறந்ததை முன்னிட்டு, கொடுங்கோளூர் நகர மக்கள், நெய்யாட்டு விழாக்கொண்டாடினர். உலகிலுள்ள எல்லா உயிர்களும், மேன்மேலும் பெருமகிழ்ச்சி பெற்று வளர்ந்து, முற்பிறப்பில் தாம் செய்த தவத்தின் வழியே தொடர்ந்து அன்பினாலே இளவரசராகும் பருவத்தை அடைந்தார்.

அப்போது, அவர் அரசாட்சிக்குரிய தொழிலில் ஈடுபடாமல், சிவபெருமானது திருவடிகளையே பேணும் கருத்துடையவராயிருந்தார். திருவாஞ்சைக்களம் என்ற ஆலயத்தை அடைந்து, அதனருகில் ஒரு மாளிகையை அமைத்துக்கொண்டு, திருத்தொண்டு புரிந்து வந்தார். அவர். ‘அரசியல்பும், உலகின் இயல்பும் நிலையில்லாதன’ என்று உணர்ந்திருந்தார்.

 அவர் ஒவ்வொரு  நாளும்  விடியற்காலையில் எழுந்து நீராடித்  

திருவெண்ணீறணிந்து நந்தவனத்திற்குச் செல்வார். அங்கே திருப்பணிகள் பலவற்றையும் செய்து, மலர்களையும் அரும்புகளையும் தொடுத்து சிவபெருமானுக்கு சாத்தி மகிழ்வார். இறைவருக்குத் திருமஞ்சனம் கொண்டு வருவார். திருக்கோயிலில் திருவுலகும், திருமெழுகும்  அன்பு மிகுதியால் செய்வார். இத்தகைய திருத்தொண்டுகள் பலவும் செய்து ஒருமைப்பட்ட உள்ளத்தோடு, திருப்பாடல்களையும் பாடி சிவபெருமானை பணிந்து வருவார்.

 இவ்வாறு பெருமாக்கோதையார், சிவத்தொண்டு புரிந்து வரும் காலத்தில், கடல் அகழியினாலும் மலைபோன்ற மதில்களினாலும் சூழப்பெற்ற கொடுங்கோளூர் நகரத்தில் கொடையில் செங்கோற்பொறையன் – இவர் சேரமான் பெருமாள்  நாயனாருக்கு முன் அரசு செய்த அரசராகும். இப்பெயர், செங்கோலைத் தாங்கி அரசு செலுத்துபவன் என்ற பொருளுடையது. இவர் தன் ஆட்சியை தானாகவே நீத்து, தவம் புரிவதற்காக கானகம் சென்றார். அரசன் மரபிலே வந்த அந்த சேர மன்னன், தபோவனம் அடைந்த பிறகு அறநூலும், ஆட்சி நூலும் அறிந்த அமைச்சர்கள், சில நாட்கள் ஆராய்ந்து தெளிந்து, ‘சிவத்தொண்டு புரியும் பெருமாக் கோதையாரிடமே அரசு தாங்கும் முதன்மை முன்னை மரபினாலே நின்றது’ என்றதைக் கண்டார்கள். உடனே அவர்கள் திருவாஞ்சக்களத்திற்கு வந்து, பெருமாக் கோதையாரை வணங்கி, ‘மறைநாட்டு அரசர் மரபு, வழிவழியாக வரும் தாயபாக முறையினால், அரசாட்சியை ஏற்று, முடிசூட்டிக்கொண்டு, செங்கோல் செலுத்தும் பொறுப்பும் உரிமையும் தங்களுக்கே உரியது’ என்று கூறினார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட பெருமாக்கோதையார், ‘இவர்கள் விருப்பத்திற்கு இணங்கினால் இன்பம் பெருகும். நம் திருத்தொண்டுக்கு தடங்கல் நேராதவாறு ஆட்சி செய்ய முடியுமா? அதற்குத் திருவருள் துணை வேண்டும்; எதற்கும் சிவபெருமானின் திருவருள் நோக்கை அறிவேன்!’ என்று சிவசன்னிதியை அடைந்தார். இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். அப்பொழுது, சிவபெருமானின் திருவருளினாலே, அன்பின் வழிபாடு தவறாமல் அரசியற்றும் வல்லமையும் யாரும்யாரும் கழறின (சொல்லிய) எல்லாவற்றையும் அறியும் அறிவும், அளவுபடாத ஆற்றலும், தடையில்லாத பெருங்குடையும், அரசர்க்குரிய படை வாகனம் முதலிய அங்கங்களும் ஆகிய இவற்றையெலாம் பெருங்கோதையார், தம் வசம் பொருந்துமாறு பெற்றார்.  மாக்கோதையார், ஆண்டவனை வாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே வந்தார். அமைச்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரசியல் மகுடம் தாங்க முன்வந்தார். (யாரும், யாரும் கழுறுவதை உணரும் இயல்பைப் பெற்றமையால், பெருமாக்கோதையாருக்கு கழறிற்றறிவார் என்று பெயர் வழங்கலாயிற்று. அவரை சேரமான் பெருமாள் என்று அழைப்பார்கள்)

கழறிற்றறிவார், நல்லதொரு நாளிலே முடிசூடிக் கொண்டார். பிறகு மணிமுடி தாங்கிய சேரமான் பெருமாள் சிவபெருமானின் திருக்கோயிலை வலம் வந்து, திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி எழுந்து துதித்து,  யானை மீது ஏறினார். வெண்கொற்றக் குடையையும், வெண்சாமரையையும், பரிஜனங்கள் தாங்கி ஏற்றவாறு  பணிபுரியச் சிறப்புடன் நகர்வலம் வந்தார்.

அரசர் பெருமான் நகர்வலம் வரும்போது, தோளிலே உவர்மண் பொதியைச் சுமந்து கொண்டு வண்ணான் ஒருவன் எதிரே வரக் கண்டார். மழையினாலே உவர் மண் கரைந்து அவன் உடல் உவர் ஏறி வெளுத்திருந்தது. வண்ணானது வெண்நிறக் கோலத்தை கழறிற்றறிவார் கண்டதும் விபுது  உத்தூளனம் – விபூதியை நீரிட்டுக் குழைக்காமல் தூளிதமாகப் பூசுதல் செய்த சிவனடியார் திருக்கோலம் இது என்று உணர்ந்து, உடனே யானையினின்றும் இறங்கினார். பேராவலோடு விரைந்து, அந்த வண்ணான் முன்சென்று அவனைக் கைகூப்பித் தொழுதார்.

 சேரமான் பெருமாள் நாயனார் தன்னை வந்து கைதொழக் கண்ட வண்ணான், மனம் கலங்கி சேரர் பெருமானை முன் வணங்கி, ‘அடியேனை யாரென்று கொண்டது? அடியேன் அடி வண்ணான்’ என்று சொன்னான்.

 சேரர் பெருமானோ, ‘அடியேன் அடிச் சேரன்’ என்று கூறி, ‘உமது வடிவினால் திருவெண்ணீற்றின் பொலிவுள்ள சிவனடியாரின் வேடத்தை நினைவுபடுத்தினீர். வருந்தாமல் செல்வீர்’ என்று மொழிந்தார். அமைச்சர்களெல்லாம், அரசர் பெருமானின் திருத்தொண்டின் தன்மைக்கண்டு, அஞ்சலி செய்து துதித்தனர்.