சூரியனார் கோயில்! – மு.திருஞானம்

பதிவு செய்த நாள் : 14 மே 2019

நவக்கிரகங்களில் முதன்மையான கிரகம் – சூரியன். உலகின் பல்வேறு நாகரீகங்களும் ஆதியிலிருந்து சூரியனை முழுமுதற்கடவுளாக போற்றி வழிபட்டு வந்துள்ளன. கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சூரிய வழிபாடுகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன என்று சரித்திர ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது சூரியக்கடவுளுக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிற பழக்கம் உள்ளது.

சூரிய புராணம் குறிப்பிடும் சூரிய வரலாறு – சூரியனின் மனைவி அஞ்சனாதேவி சூரியனின் வெப்பம் தாங்காமல் தனது நிழலை ஒரு பெண் வடிவமாக்கி சூரியனிடம் விட்டுச் செல்கிறாள். அவ்விதம் விட்டுச்சென்ற பெண்ணின் நிழல் வடிவ

மங்கைதான் சாயாதேவி.

சூரியனுடைய புத்திரர்களாக புராணங்களில் குறிப்பிடப்படுபவர்கள் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர் – சனீஸ்வரன். ‘ராமாயண’ காலத்தில் சூரியனின் புத்திரன் – சுக்ரீவன். ‘மகாபாரத’ காலத்தில் சூரியனுக்கும் குந்திதேவிக்கும் பிறந்த புத்திரன் கர்ணன்.

கருட புராணத்தில் குறிப்பிடப்படுவது இறந்த மனிதர்களின் ஆன்மாக்கள் அவரவர்  கர்மவினைகளுக்கு ஏற்றவாறு பாவ, புண்ணியங்களை அடைவார்கள். அவை ‘ஒளி உலகம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

அவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது சூரிய லோகம் ஆகும். தானம், தவம், இரண்டும் செய்த ஆத்மாக்கள் அடையும் புண்ணியலோகம் என்று கருட புராணம் – சூரியலோகம் பற்றி குறிப்பிடுகிறது!

சிவன் கோயில்களில் பெரும்பாலும் சூரிய ஒளி அவரது பாதம் தொடங்கி தலை வரை ஒளியை காட்டும் வகையில் கோயில் கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்த விஷயம் – சூரியனுக்கு உகந்த தெய்வம், சிவன்.

தை மாதத்தில் கொண்டாடப்படும் ‘சங்கராந்தி’ என்னும் விழா வட இந்தியாவில் விவசாயம் செழிக்க – பயிர் வளர சூரிய ஒளி பிரதானமாக இருக்கிறது. எனவே, மனித சமுதாயத்திற்கு உணவு தரும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் அறுவடை காலத்தில் சூரியனுக்கு பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்கின்றனர். இதே முறைதான் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது! பீகாரில் தீபாவளி பண்டிகை முடிந்த ஐந்தாவது நாளில் ஆற்றங்கரையில் சூரிய வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது!

சூரியக்கோயில்கள்!

துவாரகா, கயா, பூரி, கோனார்க், தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ஆந்திராவில் ஆரவல்லி, குஜராத்தில் மேதேரா, மகாராஷ்டிராவில் பாஜ குகை எல்லோரா, கோண்டாஹி ஆகிய ஊர்களில் சூரியக்கோயில்கள் உள்ளன.

அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் மட்டுமின்றி உள்ளத்திலும் பலம் பெருகும். அதனால்தான் மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் ‘சன் பாத்’ என்று சொல்லப்படும் சூரியக்குளியல் அதாவது உடம்பில் சூரிய ஒளிபடும் வகையில் படுத்திருப்பது பழக்கத்தில் உள்ளது! பகலில் விரிந்து இரவில் ஒடுங்கும் மலர், தாமரை மலர். சூரிய ஒளி வாங்கி மலரும். அதனால்தான் சூரியனும் தாமரையில் வீற்றிருக்கிறார்.

சூரியனின் வேறு பெயர்கள்!

‘பாஸ்கரன்’, ‘ஆதித்யன்’, ‘கதிரவன்’, ‘ஆதவ’ன், ‘சவிதா’, ‘மார்த்தாண்டன்,’ ‘விவஸ்வரன்’, ‘பாகன்’, ‘சகி’, ‘ஞாயிறு’, ‘பகலவன்’, ‘அபயகரத்தார்’ என பல பெயர்கள் சூரியனுக்கு உண்டு. வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று, ஜோதிடம். கிரகங்களின் இயக்கம் பற்றிய கணக்கீடுதான் ஜோதிடம். நவக்கிரகங்களின்

சுழற்சியில் சூரியன் பிரதான ஸ்தானத்தை பெறுகிறது!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கஞ்சனூருக்கு மேற்கே மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது சூரியனார் கோயில். கும்பகோணம், மயிலாடுதுறை, ஆடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உண்டு. ஊரின் நடுவில் உள்ள இந்த கோயில் முதலாம் குலோத்துங்கன் என்ற சோழப் பேரரசனால் 1079 முதல் 1129 வரை இருந்த அவனது ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது!  கோயில் கல்வெட்டுகளில் இந்த குறிப்பு உள்ளது!

– தொடரும்