ஒரு பேனாவின் பயணம் – 207 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 13 மே 2019

சபையில் நடக்க போவதை அன்றே சொன்னேன்..

அப்படிப்­பட்ட பழனி சுப்­பி­ர­ம­ணி­ய  பிள்ளை, கோபா­ல­கி­ருஷ்­ணய்­யர் கூப்­பிட்ட பொழு­தெல்­லாம் கைக்­கு­ழந்­தை­போல் ஓடி வந்­தி­ருக்­கி­றார். கார­ணம்,

அய்­ய­ரு­டைய வய­லில் வாசிப்­பில் கிளி கொஞ்­சும் வல­துகை வில்­லும், இடது கை விர­லும், தந்­தி­க­ளைத் தட­வித் தடவி அவற்­றி­னின்­றும் சுருதி சுத்­த­மான சங்­கீ­தத்தை, சொட்­டச் சொட்­டப் பிழிந்து தர, அவை­யில் அமர்ந்­தி­ருப்­போ­ரின் மீது அய்­யர் அவர்­கள் பன்­னீர்­போல் தெளிப்­பார். `செல்­ல­ரித்­துப் போய்­விட்­டது கர்­நா­டக சங்­கீ­தம்’ என்­றெல்­லாம் பிதற்­றிக்­கொண்டி­ ருக்­கும் பிர­ஹஸ்­பதி­ களுக்­குக் கூடப்

புல்­ல­ரித்­துப் போகும். வருடா வரு­டம் தியா­க­பி­ரம்­மத்­தின் மஹோத்­ஸ­வத்தை ஸ்ரீரங்­கத்­தில் அமர்க்­க­ள­மாக நிகழ்த்­திக் ­காட்­டி­ய­வர் மருங்­கா­புரி. அந்த நிகழ்ச்சி ­யில் அன்­றைய சங்­கீத உல­கின் ஜாம்­ப­வான்­க­ளெல்­லாம் சல்­லிக்­காசு வாங்­கா­மல் வந்து பாடி­விட்­டுப் போயி­ருக்­கி­றார்­கள். அந்­தக் கச்­சே­ரி­களை அடி­யேன் கண்­வி­ழித்­துக் கேட்­ட­தன் பயன்­தான், நான் இன்று பெற்­றி­ருக்கு நயா­பைசா அளவு சங்­கீத ஞானம்.

எங்­கள் ஊர் மண்­ணுக்கு இசைத்­து­றை­யில் பெருமை சேர்ந்த இவ­ரைப் போல, ஹரி­கதை என்­னும் அரிய கலையை படி­மிசை பரப்பி அம­ர­ரா­கி­விட்ட கீர்த்­தன குல­சே­கர எம்­பார்   விஜ­ய­ரா­க­வாச்­சா­ரி­யார்   ஸ்ரீரங்­கம் என்­னும் திவ்­விய சேஷத்­தி­ய­வா­சி­யா­வார்­கள். எம்­பார் அவர்­க­ளைப் பற்­றிச் சொன்­னால் எவ்­வ­ளவோ சொல்­ல­லாம். அவர் நந்­த­னார் கதை சொன்­னால் நக­ரமே விடிய விடிய நின்று கொண்டு கேட்­கும்.  எம்­பார்  என்­னு­டைய இந்­தத் தொட­ரில் வேறு ஒரு கால கட்­டத்­தில் முக்­கி­ய­மான இடத்­தைப் பெற வேண்­டி­யி­ருப்­ப­தால் இப்­போது அவ­ரைப் பற்றி இந்த மட்­டோடு நிறுத்­திக்­கொள்­கி­றேன்.

துரை­ராஜ் என் பள்­ளித் தோழர். ஸ்ரீரங்­கம் அம்மா மண்­ட­பத்­தில் இருக்­கும் அவர் வீட்­டிற்­குச் செல்­லும் போதெல்­லாம். அவ­ரு­டைய சகோ­த­ரி­யாரை சந்­தித்து நாலு­வார்த்தை பேசி­வி­ட­வேண்­டும் என்­பது என் நெடு­நா­ளைய ஆசை.   துரை­ரா­ஜின் சகோ­த­ரி­யார் ஒரு சென்னை வாசி. இருப்­பி­னும் அடிக்­கடி ஸ்ரீரங்­கம் வந்து சொந்த வீட்­டில் தங்­கு­வ­துண்டு. அவரை நேரில் பார்த்­து­வி­ட­வேண்­டும் என்­கிற ஆவல் எனக்கு ஸ்ரீரங்­கம் சக்­க­ரத்­தாழ்­வார் சந்­நி­தி­யில்­தான் நிறை­வே­றி­யது.

துரை­ரா­ஜின் நண்­பன் என்று நானே அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்டு அந்த அம்­மை­யாரை வணங்­கி­னேன். என்­பால் மிகுந்த அன்பு கொண்டு சிறிது  நேரம் நின்று பேசி­விட்டு சக்­க­ரத்­தாழ்­வார் சந்­நி­தி­யைப் பிர­தட்­ச­னம் செய்ய ஆரம்­பித்­தார்­கள்.

சிறை­யி­லி­ருக்­கும் தன் கண­வர் சீக்­கி­ரம் நல்­ல­ப­டி­யாக மீண்­டு­வர ஒரு மண்­ட­லம் விடா­மல் விளக்­கேற்றி விர­த­மி­ருந்­தார் துரை­ரா­ஜின் சகோ­த­ரி­யார்.

சக்­க­ரத்­தாழ்­வார் சந்­நி­தியை சுற்­றி­யது வீணா­க­வில்லை. அந்த அம்­மை­யா­ரின் கண­வர் சீக்­கி­ர­மா­கவே சிறை­யி­னின்­றும் மீண்டு வந்­தார்.

அம்மா மண்­ட­பத்­தில் இருக்­கும் துரை­ரா­ஜின் வீடு திரு­வி­ழாக்­கோ­லம் பூண்­டது. அவ­ரது சகோ­த­ரி­யா­ரை­யும், சிறை மீண்ட அவர் கண­வ­ரை­யும் காண, சிறு­சிறு கூட்­ட­மாக மக்­கள் வந்த வண்­ண­மி­ருந்­த­னர். அந்த கூட்­டத்­தில் ஒரு­வ­னாக நானும் இருந்­தேன். அப்­போது துரை­ராஜ் அங்கு இல்­லா­த­தால், அவ­ரது சகோ­த­ரி­யின் கண­வ­ரி­டன் நானே என்னை துரை­யின் நண்­பன் என்று சொல்­லி­விட்டு, துரை­ரா­ஜனை  போல நானும் கதை, கவி­தை­யெல்­லாம் எழு­து­வேன் என்று சொன்­னேன். என் நண்­பர் துரை ‘அருவி அழைக்­கி­றது’ என்று ஒரு நாவலை எழுதி அச்­சிட்­ட­வர்.

துரை­ரா­ஜின் சகோ­த­ரி­யார் `உட்­காரு தம்பி’ என்­றார்­கள். உட்­கார்ந்­தேன். உடனே அந்த அம்­மை­யார் கண­வர் ` ஏம்பா ! நீ கதை கிதை எழு­து­வேங்­கி­றீயே. இந்­தக் கேள்­விக்கு பதில் சொல்­லு­வியா ?’ என்று என்­னைக் கேட்­டார்.

`சொல்­றேன்’ நான் சுறு­சு­றுப்­பாக பதில் அளித்­தேன்.

`முயல் ஆமை­யால் தோத்­துதே அந்­தக் கதை தெரி­யும் உனக்கு ?’ என்று அவர் கேட்க, ` என்ன சார்! இது கூடவா தெரி­யாது !’’ என்று சற்று எரிச்­ச­லோடு சொன்­னேன் நான்.

`முயல் ஆமை­யால் தோத்­த­துகு என்ன கார­ணம் ?’ என்று ஒரு விடு­கதை போல என்­னைக் கேட்­டார் அவர். ‘முயல் தூங்­கிப்­போச்சு அத­னால தோத்­துப் போச்சு’ என்று நான் சொல்லி முடிப்­ப­தற்­குள்  ‘அது­தான் எல்­லோ­ருக்­கும் தெரி­யுமே, தம்பி! முயல் ஆமை­யால் தோற்­றது. இதுக்கு ஒரு முக்­கிய கார­ணம் இருக்கு சொல்லு’ என்­றார் அவர்.

நான் குழம்­பிப் போனேன். என் குழப்­பத்தை தெளி­வு­ப­டுத்­தும் வண்­ண­மாக `` தம்பி!  `முயல் ஆமை­யால் தோற்­றது’ அப்­ப­டீங்­கிற வாக்­கி­யத்தை பத்­து­வாட்டி சொல்­லிப் பாரும் முயல் தோற்­ற­தற்­கான கார­ணம் புரி­யும்..’’ என்று அவர் என்னை ஸ்ரீரா­ம­ஜெ­யம் போல் அந்த வாக்­கி­யத்தை திரும்ப திரும்ப சொல்­லச் சொன்­னார்.

`முயல் ஆமை­யால் தோற்­றது! முயல் ஆமை­யால் தோற்­றது ‘ என்று வேக­வே­க­மாக நான் சொல்­லச் சொல்ல எனக்கு அவர் கேள்­விக்­கான விடை தெரிந்­து­விட்­டது.

`சார் ! முயல் ஆமை­யால் தோற்­ற­துக்­குக் கார­ணம் தெரிஞ்சு போச்சு சார்’ என்­றேன்

`சொல்­லு’­­­என்­றார் அவர்.

 `முய­லா­மை­யால் தோற்­றது ‘ என்று சொல்­லி­விட்டு ` அதா­வது முயற்சி பண்­ணா­மை­யால் தோற்­றது’ என்­றும் சொன்­னேன்.

`பலே’ என்று என் முது­கில் தட்­டிக் கொடுத்­து­விட்டு ` தம்பி நீ வாழ்க்­கை­யிலே பொழைச்­சுக்­குவே  ‘’ என்று வாயார என்னை வாழ்த்­தி­னார் அவர்.

வாழ்த்­தி­ய­வர் கலை­வா­ணர்  என்.எஸ். கிருஷ்­ணன், துரை­ரா­ஜின் சகோ­த­ரி­யார்  மது­ரம் அம்­மை­யார்.

ஒரு சம­யம் எம்.ஜி.ஆரும், நானும் மதுரை சர்க்­யூட் ஹவு­ஸில் தங்­கி­யி­ருந்­தோம். தமி­ழக முதல்­வர் என்­கின்ற முறை­யில் எம்.ஜி.ஆர் அந்த சர்க்­யூட் ஹவு­ஸில் காளி­முத்து, எட்­மண்ட் ஆகி­யோ­ரு­டன் அரசு விஷ­யங்­க­ளைப் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது நான் அதே அறை­யில் ஒர் ஓர­மாக வெற்­றி­லை­யக் குதப்­பிக்­கொண்டு உட்­கார்ந்­தி­ருந்­தேன். பால­கு­ருவா செட்­டி­யார், அப்­போ­தைய எம்.எல்.ஏ. எனக்­காக சோழ­வந்­தா­னி­லி­ருந்து துளிர் வெற்­றி­லை­யா­கத் தரு­வித்­தி­ருந்­தார்.

அமைச்­சர்­கள் வெளியே சென்ற பிறகு, நானும் எம்.ஜி.ஆரும் சாப்­பிட உட்­கார்ந்­தோம். எம்.ஜிஆ­ரின் உத­வி­யா­ளர் சப்­பாத்தி பரி­மா­றிக்­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது எம்.ஜி.ஆர். என்­னி­டம் ` வாலி, நான் அப்­பவே உங்­க­ளைக் கட்­சி­யில் சேரச் சொல்லி ரொம்ப  வற்­பு­றுத்­திக் கேட்­டேன். நீங்க சிரிச்­சுக்­கிட்டே சும்மா இருந்­துட்­டீங்க. அப்ப கட்­சி­யில சேர்ந்­தி­ருந்தா உங்­களை ஸ்ரீரங்­கம் தொகுதி எம்.எல்.ஏவா ஆக்­கி­யி­ருப்­பேன். நீங்க மந்­தி­ரி­யா­கக் கூட ஆகி­யி­ருக்­க­லாம். உங்க ஊருக்கு பெரு­மை­யாக இருந்­தி­ருக்­கும் ‘ என்று மீனி­லி­ருந்த முள்ளை எடுத்­த­வாறே சொன்­னார்.

நான் பதில் சொன்­னேன், ` அண்ணே, நான் மந்­தி­ரியா ஆகாட்டா என்ன ? எங்க ஊர் பெரு­மைப்­ப­டும்­ப­டி­யா­கத்­தான் என் சிஷ்­யனை நீங்க மந்­திரி ஆக்­கிட்­டீங்­களே ‘ என்­ற­வு­டன் வழக்­கம் போல் அவ­ருக்கே உரித்­தான அழ­குப் புன்­ன­கை­யைச் சிந்­தி­னார் எம்.ஜி.ஆர்.

திருச்சி சவுந்­த­ர­ரா­ஜன் என்­னு­டைய நாடக உலக சிஷ்­யன் என்­ப­தும், சவுந்­த­ர­ரா­ஜ­னின் தந்­தை­யார் திரு ராஜ­கோ­பால் நாயுடு என்­னைத் தன்­னு­டைய மான­சீ­கப் புத்­தி­ரன் என்­று­தான் அழைப்­பார் என்­ப­தெல்­லாம் எம்.ஜி.ஆருக்கு ஏற்­கெ­னவே நான் சொல்­லித் தெரிந்த விஷ­யம்­தான்.

ஆக, என்­னு­டைய ஊருக்கு பெருமை சேர்த்­த­வர்­களை நான் எண்­ணிப் பார்க்­கை­யில், திரு­வ­ரங்­கத்து மண்­ணின் மேன்மை எனக்­குத் தெள்­ளத் தெளிய புல­னா­கி­றது. இத்­தகு மண்­ணின் பெரு­மை­யைப் பேச வரும்­போது, இந்த் மண்­ணில் மண­முள்ள ஒரு பெண்­ணின் பெரு­மை­யை­யும் பேச­வேண்­டும் என்று நான் பெரி­தும் விரும்­பு­கி­றேன்.

ஏறத்­தாழ முப்­ப­தாண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக எனது நண்­பர் திரு வி. கோபா­ல­கி­ருஷ்­ண­னோடு, தியா­க­ராய நகர் சிவ­ஞா­னம் தெரு­வில் ஒரு வீட்­டுக்கு நான் செல்ல நேர்ந்­தது. அந்த வீட்­டின் குடும்ப நண்­பர் கோபி. அந்த குடும்­பத்­துத் தலை­வி­யி­டம் ` இவர் பேரு வாலி. சினி­மா­வுல சில பாட்­டுக்­கள் எழு­தி­யி­ருக்­காரு. சொந்த ஊர் ஸ்ரீரங்­கம்’ என்று கோபி அவர்­கள் சொன்­ன­தும், ` எங்க பூர்­வி­க­மும் ஸ்ரீரங்­கம்­தான் ‘ என்று அந்த அம்­மை­யார் முக­மெல்­லாம் மகிழ்ச்சி பொங்க எனக்கு முக­முன் கூறி­னார்­கள்.

அன்று நெடு­நே­ரம் கோபி­யும், நானும், அந்த அம்­மை­யா­ரோடு பேசிக்­கொண்­டி­ருந்­தோம். அப்­போது அவர்­க­ளது சகோ­த­ரி­யார் திரு­மதி அம்­பு­ஜம் அவ­ரது கண­வர் திரு வெங்­கட்­ரா­ம­னும் உட­னி­ருந்­த­தாக நினைவு. திரு­மதி அம்­பு­ஜம் அவர்­கள்­தான், ‘வித்­தி­யா­வதி’ என்­னும் பெய­ரில் திரைப்­ப­டங்­க­ளில் பணி­யாற்­றி­ய­வர். கோபி­யு­டன் சென்று நான் சந்­தித்த அந்த அம்­மை­யார்­தான் திரு­மதி சந்­தியா, அவர்­க­ளது திரு­ம­க­ளும் இன்­றைய முதல்­வ­ரு­மான ஜெய­ல­லிதா பற்­றித்­தான் ` ஸ்ரீரங்­கத்து மண்­ணின் மண­முள்ள பெண்’ என்று நான் இக்­கட்­டு­ரை­யின் தொடக்­கத்­தில் குறிப்­பிட்­டேன்.

ஆயி­ரம் விழு­து­கள் பரப்­பும் ஆல­ம­ரத்­தைச் சின்­னஞ்­சிறு விதைக்­குள் சிறை வைப்­பது போல். அளப்­ப­ரிய கீர்த்­தி­யை­யும் நேர்த்­தி­யை­யும் இந்­தப் பெண்­ணுள் இறை­வன் பொதிந்து வைத்­தி­ருக்­கி­றான்.  ஜெய­ல­லி­தா­வின் அறி­வை­யும், ஆற்­ற­லை­யும் ஆரம்ப நாட்­க­ளி­லி­ருந்தே, துலாக்­கோல் போல் துல்­லி­ய­மான எடை போட்­ட­வன் நான். இரு­வ­ரும் ஒரே துறை­யில் தொழில் புரிந்­த­தால், அவரை ஓர­ளவு ஆறி­தல் எனக்கு சாத்­தி­ய­மா­யிற்று.

பட­வு­ல­கத்­தின் புகழ்க்­கீ­ரி­டத்தை அவர் சுமந்­தி­ருந்­த­போது. பாட்­டும் பர­த­மும் பள்­ளித்­தோ­ழி­கள் போல அவர் பக்­க­லில் இருந்­தன.

ஒரு நாள் ` அடி­மைப்­பெண்’ நான் எழு­தி­யி­ருந்த ` அம்மா என்­றால் அன்பு’ எனும் பாட்டு விஷ­ய­மாக  எம்.ஜி.ஆர். தொலை­பே­சி­யில் பேசு­கை­யில் ` வாலி! இந்­தப் பாட்டை அம்­முவை பாட வைக்­க­லாம் என்­றி­ருக்­கி­றேன்’ என்­றார்.

`ரொம்ப சந்­தோ­ஷம் ‘ என்று நான் சொல்­லி­விட்டு மேற்­கொண்டு ஒரு விஷ­யத்தை எம்.ஜி.ஆரி­டம் விளக்­கி­னேன்.

`அண்ணே ! பிற­கா­லத்­தில் இவங்­களை நீங்க படத்­துல பாட வைப்­பீங்­கன்­னு­தான். ஏற்­க­னவே நான் தீர்க்­க­த­ரி­ச­ன­மாக சொல்­லி­வைத்­தி­ருக்­கி­றேனே. கவி­ஞன் வாய்க்­குப் பொய்க்­காது !’

`எப்­படி? எப்­படி? ‘ என்று எம்.ஜி.ஆர் ஆர்­வ­மா­கக் கேட்­டார்.

`அரச கட்­டளை’ திரைப்­ப­டத்­தில்  ஜெய­ல­லி­தா­வுக்கு  நான் எழு­தி­யி­ருந்த் பாடலை அவ­ருக்கு நினை­வூட்­டி­னேன்

`என்­னைப்

பாட­வைத்­த­வர் ஒரு­வன் ; என்

பாட்­டுக்கு அவன்­தான் தலை­வன் !’

இதை நான் சொன்­ன­தும் எம்.ஜி.ஆர் ஒரு குழந்தை போல் சிரித்து `` வாழ்க! வாழ்க! உங்க வாக்கு எப்­ப­வுமே இப்­ப­டிப் பலிக்­க­ணும்’ என்­றார்.

ஒன்று குறிப்­பிட மறந்­து­விட்­டேன். `அம்­மு’­­­என்­பது செல்வி ஜெய­ல­லி­தா­வின் செல்­லப் பெயர். பிறகு ` சூரிய காந்தி’ படத்­தி­லும் ஜெய­ல­லிதா நான் எழு­திய பாடல்­க­ளைப் பாடி­னார்.

எதி­லும் தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொள்­ளும் பற்­றும். பற்­றி­யதை விடா­மல் சாதித்­துக்­காட்­டும் சாது­ரி­ய­மும், கனல் வளை­யத்­திற்­கி­டையே கற்­பூ­ர­மாக சிக்­கிக்­கொண்­டா­லும், மேனி காயம்­ப­டாது மீண்­டு­வ­ரும் வித்­தை­யும் அவ­ருக்கு இறை­வன் அரு­ளிய கொடை­யாக இருப்­ப­தால்­தான், கோடம்­பாக்­கத்­தி­லி­ருந்து கோட்­டைக்கு வந்து கொலு­வி­ருத்­த­லும், கோலோச்­சு­த­லும் அவ­ருக்கு கைவந்த கலை­யா­யிற்று.

இளம் வய­தில் ஈன்ற தாயை இழந்த ஒரு பெண்­மணி தனித்து நின்று  அர­சி­ய­லில் இறங்கி, ஏச்­சுக்­கும் பேச்­சுக்­கும் இடர்­ப­டாது தமிழ் கூறும் நல்­லு­ல­கின் தலை­வி­தியை நிர்­ண­யிக்­கும் தலை­வி­யா­கக் கிளர்ந்து, இன்று தகத்­த­கா­ய­மாக விளங்­கு­வதை எண்­ணுங்­கால், ` அப்­போதே சொன்­னானே பாரதி’ என்று அவ­னது புது­மைப் பெண்­ணப் பற்­றிய தீர்க்க தரி­ச­னம் நம் கண்­க­ளுக்­குப் புல­னா­கின்­றது.

ஸ்ரீரங்­கத்தை பூர்­வி­க­மா­கக் கொண்ட  ஒரு குடும்­பத்­தின் வழித்­தோன்­றல்; அது­வும் ஒரு பெண் ஒரு விஸ்­வ­ரூ­பம் எடுத்து  நிற்­பதை விழி­கள் வீரிய வியப்­போடு அப்­போதே பார்த்­த­வன் நான்.

`1984ல் பெரிய புள்­ளி­கள் என்­னும் என் கவிதை நூல் வெளி­யி­டப் பெற்­றது. அதில் செல்வி ஜெய­ல­லி­தா­வைப் பற்­றி­யும், அவ­ரைப் பெண் என்று பாரா­மல் கடு­மை­யாக விமர்­சிக்­கும் ஆட­வ­ரைப் பற்­றி­யும் கீழ்க்­கண்­ட­வாறு நான் கோபத்­தோடு எழு­தி­யி­ருக்­கி­றேன்.

-

 `புரட்­சிப் பெண்ணே!

நீ

புடவை கட்­டிய அபி­மன்யூ;

அத­னால்­தான்…

சுற்­றி­நின்ற

துரோண்ர்­களை

ஒற்­றை­யா­கவே நின்று

எதிர்த்­தாய்;

உன்

 புரா­ணத்­தில்

துரோ­ணர்­களே

தோற்­றுப் போனார்­கள்

நான்

அர­சி­ய­லில்

கோஷ்­டி­க­ளின் சண்­டை­யைக்

கண்­டி­ருக்­கி­றேன்

ஒரு

சேலையை எதிர்த்த

கோஷ்­டி­க­ளின் சண்­டையை

உன்­னால்­தான் காண நேர்ந்­தது.

நியா­யம்

 உன் பக்­கமா

 அவர்­கள் பக்­கமா’

என்­பதை

நான­றி­யேன்;

ஒரு

மல­ரைச்

சாய்ப்­ப­தற்கு

இத்­தனை மரங்­கள்

முண்டா தட்­டி­ய­து­தான்

என்

மனத்தை

சங்­க­டப்­ப­டுத்­தி­யது

பெண்ணே !

இந்­தக் கவிதை

உன் அர­சி­ய­லைப் பற்றி

எழு­தப்­பட்­ட­தல்ல;

உன்

ஆண்­மை­யைப் போற்றி

ஆக்­கப்­பட்­டது

இந்­தக் கவி­தையை நான் எழு­தும்­போ­தும்  ஜெய­ல­லிதா எந்த அர­சுப் பொறுப்­பை­யும்  ஏற்­க­வில்லை என்­பதை மன­தில் கொண்டு வாச­கர்­கள் படிக்க வேண்­டு­கி­றேன்.

என் அருமை நண்­ப­ரும், அன்­றைய அமைச்­ச­ரு­மான  ஆர்.எம்.வீ. இந்த நூலை வெளி­யிட்­டார்­கள். இந்த கவி­தை­யை­யும் படித்­துப் பார்த்­தார்­கள். அவர் என்ன நினைப்­பார் ?

-                           (தொட­ரும்)