திருச்சூர் கோயில் வாசல் கதவை தள்ளித் திறந்த `ராமன்’ யானை: பூரம் திருவிழா கோலகலத் தொடக்கம்

பதிவு செய்த நாள் : 12 மே 2019 20:56

திருச்சூர்,

பழமை வாய்ந்த திருச்சூர் வடக்குநாதன் கோவிலின் தெற்கு கோபுர வாயில் கதவுகளை, `ராமன்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற `தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன்’ யானை தள்ளித் திறந்ததைத் தொடர்ந்து, பக்தர்களின் பெரும் ஆரவாரம், உற்சாகத்துக்கு மத்தியில், கேரளாவின் மாபெரும் கோவில் திருவிழாவான திருச்சூர் பூரம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலகலமாகத் தொடங்கியது.

கேரளத்தின்  திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கேற்க,  புகழ்பெற்ற `ஒற்றைக் கண் ராமன்’ யானைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

`பூரம் விளம்பரம்’ என்று அழைக்கப்படும் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கும் பகல் 11 மணிக்கும் இடையே நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ராமன் யானை ஒரு லாரியில் தெக்கிநாடு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, `நெய்திலக்காவிலம்மா’ அம்மன் சிலையை மற்றொரு யானையான தேவிதாசன் யானையிடம் இருந்து ராமன் யானை பெற்றுக் கொண்டது. அதையடுத்து, திருவிழாவின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் கோயிலின் தெற்கு கோபுர வாயில் கதவை தள்ளித் திறந்து ராமன் யானை வெளியே வந்தது. அதைத் தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

அருகேயுள்ள தெக்கிநாடு மைதானத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு  பல்லாயிரக் கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் பெருத்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் இதைக் கண்டு மகிழ்ந்தனர்.

யானைகள்  அணிவகுப்பு

திருச்சூர் பூரம்  திருவிழாவில்,  50-க்கும் மேற்பட்ட  யானைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். கொச்சி அரச குடும்பத்தினரால் கடந்த 18-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, அதில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது.

`தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன்’

இந்த 50 யானைகளில், `ராமன்’ என அன்புடன் அழைக்கப்படும்  `தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன்’   யானைதான் கம்பீரமாக நடுநாயகமாகத் திகழும்.  திருச்சூர் பூரம் திருவிழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் வடக்குநாதன் கோவிலின் தெற்கு வாயில் கதவுகளை இந்த யானைதான் முட்டித் தள்ளி திறப்பது வழக்கம். கடந்த 1970-களில் இருந்து இது நடந்து வருகிறது.

இந்த யானைக்கு இப்போது 54 வயது ஆகிறது. ஒருகண் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரியில் குருவாயூரில்  2 பேரை காலால் மிதித்துக் கொன்றதை அடுத்து, இந்த யானை எந்த திருவிழாவிலும்  பங்கேற்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதற்கு முன்பு இந்த யானை 11 பேரைக் கொன்றிருக்கிறது. 2 யானைகளையும் சாகடித்திருக்கிறது.

யானை உரிமையாளர்கள்  போராட்டம்

இந்தப் பின்னணியில், தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் யானைக்கு விதித்த தடையை நீக்காவிட்டால்,  , எந்த திருவிழாவுக்கும் யானைகளை அனுப்புவதில்லை என  கேரள யானை உரிமையாளர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை செய்திருந்தது.

நீதிமன்றம் தலையிட மறுப்பு

இந்நிலையில். இந்த யானைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, யானை உரிமையாளர்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிபதி அனு சிவராமன்,  இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடாது என்றும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே சபரிமலை பிரச்சினையில் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, இந்த யானை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஆர்வமாக  இருந்தது. ஏற்கெனவே, சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராமனைக் காப்பாற்றுவோம் என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை  முடுக்கி விட்டிருந்தனர்.

இதையடுத்து, திருச்சூர் மாவட்ட ஆட்சியர் டி.வி.அனுபமா தலைமையில், கோட்ட வனத் துறை அதிகாரி, கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய வல்லுநர் குழு  கூடி இது பற்றி ஆய்வு செய்தது. ராமன் யானைக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராமன் யானைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் ராமன் யானை பூரம் திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி இப்போது புகழ்பெற்ற ராமன் யானை பங்கேற்க திருச்சூர் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது.

இந்த ராமன் யானைதான் இந்தியாவிலேயே மிகவும் உயரமான (3.22 மீட்டர் - 10.5 அடி) யானை ஆகும். ஆசியாவில் 2-வது உயரமான யானை என்ற சிறப்பும் இதற்கு இருக்கிறது. தும்பிக்கையின் நீளம் 75 செ.மீ.. இதன் எடை 6 ஆயிரம் கிலோ.

திருச்சூர் பூரம் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்த யானை ரூ.2.10 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் இதற்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.