புகழ்பெற்ற `ஒற்றைக் கண் ராமன்’ யானைக்கு தடை நீக்கம்: திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கேற்க அனுமதி

பதிவு செய்த நாள் : 11 மே 2019 19:19

கொச்சி,

கேரளத்தின்  திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கேற்க,  புகழ்பெற்ற `ஒற்றைக் கண் ராமன்’ யானைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது இறுதிச் சுற்றில் யானை ஆர்வலர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

திருச்சூர் பூரம் திருவிழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில், பழமை வாய்ந்த வடக்குநாதன் கோவிலின் தெற்கு வாயில் கதவுகளை முட்டித் தள்ளி திறக்கும் கோலாகல நிகழ்ச்சியில், ஞாயிற்றுக்கிழமை இந்த யானை பங்கேற்கும்..

யானைகள்  அணிவகுப்பு

திருச்சூர் பூரம்  திருவிழாவில்,  50 யானைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்ச்சிதான் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். கொச்சி அரச குடும்பத்தினரால் கடந்த 18-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, அதில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது.

`தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன்’

இந்த 50 யானைகளில், `ராமன்’ என அன்புடன் அழைக்கப்படும்  `தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன்’ என்ற  ஒரு மிகப்பெரிய யானைதான் கம்பீரமாக நடுநாயகமாகத் திகழும்.  திருச்சூர் பூரம் திருவிழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் வடக்குநாதன் கோவிலின் தெற்கு வாயில் கதவுகளை இந்த யானைதான் முட்டித் தள்ளி திறப்பது வழக்கம். கடந்த 1970-களில் இருந்து இது நடந்து வருகிறது.

இந்த யானைக்கு இப்போது 54 வயது ஆகிறது. ஒருகண் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரியில் குருவாயூரில்  2 பேரை காலால் மிதித்துக் கொன்றதை அடுத்து, இந்த யானை எந்த திருவிழாவிலும்  பங்கேற்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதற்கு முன்பு இந்த யானை 11 பேரைக் கொன்றிருக்கிறது. 2 யானைகளையும் சாகடித்திருக்கிறது.

யானை உரிமையாளர்கள்  போராட்டம்

இந்தப் பின்னணியில், தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் யானைக்கு விதித்த தடையை நீக்காவிட்டால்,  எந்த திருவிழாவுக்கும் யானைகளை அனுப்புவதில்லை என முடிவு செய்திருப்பதாக கேரள யானை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி. சசிகுமார் தெரிவித்திருந்தார்.

ராமச்சந்திரன் யானையின் வலது கண்ணில்தான் பார்வைக் குறைபாடு இருக்கிறது. ஆனால் இடது கண் 100 சதவீதம் நன்றாக இருக்கிறது.  எனவே தடை விதி்த்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என இந்த யானையை  சொந்தமாக வைத்திருக்கும் தெச்சிக்கோட்டுக்காவு தேவசம் அமைப்பின் தலைவர் ஆர். சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம் தலையிட மறுப்பு

இந்நிலையில். இந்த யானைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, யானை உரிமையாளர்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிபதி அனு சிவராமன்,  இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிடாது என்றும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே சபரிமலை பிரச்சினையில் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, இந்த யானை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஆர்வமாக  இருந்தது. ஏற்கெனவே, சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராமனைக் காப்பாற்றுவோம் என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை  முடுக்கி விட்டிருந்தனர்.

இதையடுத்து, திருச்சூர் மாவட்ட ஆட்சியர் டி.வி.அனுபமா தலைமையில், கோட்ட வனத் துறை அதிகாரி, கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய வல்லுநர் குழு  கூடி இது பற்றி ஆய்வு செய்தது. ராமன் யானைக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராமன் யானைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் ராமன் யானை பூரம் திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் கட்டுப்பாடுகள் வருமாறு:

நிபந்தனைகள், கட்டுப்பாடுகள்

கேரள மாநிலம் திருச்சூரில் மே 13ம் தேதி காலை பூரம் திருவிழா நடைபெற உள்ளது.

திருவிழாவின்போது ஏதேனும் விபத்து நடந்தால், ராமன் யானையின் உரிமையாளர்களான திருச்சூர் பேரமங்கலம் கோவில் அறக்கட்டளைதான் பொறுப்பு.

ராமன் யானையைச் சுற்றி 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு அரண் அமைக்க வேண்டும்.

ராமன் யானையை சுற்றிச் சூழ்ந்து நிற்கவோ, அதற்கு வணக்கம், வாழ்த்து சொல்லவோ மக்களுக்கு அனுமதி  இல்லை.

ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேரம் மட்டுமே யானை மக்கள் பார்வைக்கு வரும். 4 பாகன்கள் அந்த யானையுடன் இருப்பார்கள்.

ஒரு வார கால திருவிழா நிகழ்ச்சிகளில் மொத்தம் 90 யானைகள் பங்கேற்கும்.

இந்தியாவிலேயே மிகவும் உயரமான (3.22 மீட்டர் - 10.5 அடி) யானை, ஆசியாவில் 2-வது உயரமான யானை என்ற சிறப்புக்குரிய ராமன் யானை துவக்க (விளம்பரம்) நிகழ்ச்சியில் பங்கேற்கும்.