பிளஸ்1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒருமொழிப்பாடமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பதிவு செய்த நாள் : 11 மே 2019 12:30

பரமத்தி

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதினால் போதும் என்று வெளியான செய்தி தவறு என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கு முன்னர்  11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்று வந்த தேர்வு,  தற்போது பாடச்சுமையை காரணம் காட்டி, 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது.

கடந்த ஆண்டும், நடப்பாண்டும் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடைபெற்றது.

2018 – 2019ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்  கடந்த வாரம் வெளியாகின.

 12 ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.

நேற்று மதியம் முதல் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை, 600 மதிப்பெண்களை 500 மதிப்பெண்ணாக குறைக்க எண்ணியுள்ளதாகவும், அதற்காக ஒரு மொழிப் பாடத்தை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

11,12 ஆம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் நலனை கருதி, 500 மதிப்பெண்களுக்கு 5 பாடத்தில் மட்டும் தேர்வு எழுதும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முயற்சிப்பதாக  செய்திகள் வெளியாகின.

தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என்பதை  ஒரே தாளாக மாற்றவும் முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இதனால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழை நீக்க சதி நடப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இது போன்ற தகவல்கள் உண்மையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன. மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது.

11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல 6 பாடங்கள் இருக்கும். 5 பாடங்களாகக் குறைக்கப்படாது.

மொழிப்பாடங்களை நீக்குவதற்கான அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை .

 இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் வழக்கம் போல 6 பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.