திண்ணை 12–5–19

பதிவு செய்த நாள் : 12 மே 2019

சோ எழுதிய, ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ நுாலிலிருந்து:

நான் எழுதிய, ‘முகமது பின் துக்ளக்’ உட்பட பல நாடகங்களுக்கு, எம்.ஜி.ஆர்., தலைமை தாங்கி கவுரவித்துள்ளார்.

நாடகத்தின் ஒவ்வொரு காட்சி, ஒவ்வொரு பாத்திரம்... எல்லாவற்றையும் நினைவு வைத்து, மிக அழகாக மேடையிலேயே விமர்சனம் செய்வார், எம்.ஜி.ஆர்.,

‘கோப்பு’ என்ற வார்த்தையை அமலுக்கு எடுத்து வந்த, எம்.ஜி.ஆருக்கு, எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரு சொல்லை, தான் கண்டுபிடித்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். எங்கள் நாடகம் ஒன்றில், ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தின், ‘கிராமபோன் ரெக்கார்டை’ வெளியிட்டார்,

எம்.ஜி.ஆர்.,

புதிய சொல்லை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில், ‘ரெக்கார்ட்’ என்பதற்கு பதிலாக, ‘தஸ்தாவேஜு’ என, பயன்படுத்தி, ‘இந்த, முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு...’ என்றே, பேசி முடித்து விட்டார்.

‘ரெக்கார்ட்’ என்ற வார்த்தைக்கு அவர் கண்டுபிடித்த தமிழ் சொல் அது.

எம்.ஜி.ஆர்., பேசிய பிறகு மற்றவர்கள் என்ன செய்வது... பிரபல சினிமா அதிபர், ஏ.எல்.சீனிவாசன் உட்பட வேறு பலரும், மிகவும் சிரமப்பட்டு, ‘துக்ளக் தஸ்தாவேஜு; துக்ளக் தஸ்தாவேஜு’ என்றே பேசினர்.

இதை என்னால் தாங்க முடியவில்லை. உடனே, நான் எழுந்து பேச துவங்கினேன்.

‘எம்.ஜி.ஆர்., வெளியீடு செய்ததை, தஸ்தாவேஜு என்று சொல்லி விட்டார். அதற்காக நீங்கள் யாராவது கடைக்கு போய், ‘முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு ஒண்ணு கொடு...’ என்று கேட்டால், கடைக்காரர் முழிப்பார். ‘டாக்குமென்ட்’ என்பது தான், தஸ்தாவேஜு. இது, ‘ரெக்கார்ட்!’

‘கடைக்கு போய், முகமது பின் துக்ளக் ரெக்கார்ட் வேண்டும் என்று கேளுங்கள். தஸ்தாவேஜு வேண்டும் என்று கேட்காதீர்கள்...’ என்றேன்.

இதை கேட்டவுடன் அனைவரும் சிரித்தனர்;

எம்.ஜி.ஆரும் சிரித்தார்.

நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்போது, ‘உங்களை உடன் வைத்து உருப்படியாக எந்த விஷயத்தையும் பேசக் கூடாது. அதை நாசம் பண்ணி விடுவீர்கள்...’ என்று சிரித்தபடியே சொன்னார், எம்.ஜி.ஆர்.,

சிவாஜிக்கு என் மீது அபார ஈடுபாடு உண்டு. ‘துக்ளக் என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க போகிறேன்...’ என, முதலில், சிவாஜியிடம் தான் கூறினேன். அதற்கு, சிவாஜி எப்படி ஆசிர்வாதம் செய்தார் தெரியுமா?

‘நீ ஏற்கனவே குரங்கு... பத்திரிகை ஆரம்பிக்க போறியா... சபாஷ்...

குரங்கு, கள்ளை குடிச்சு, இஞ்சியை கடிச்சு, மிளகாயை தின்று, அதை தேளும் கொட்டினா, எப்படி இருக்குமோ அப்படி இருக்கப் போவுது; செய்...’ என்றார்.