புத்திசாலி இளவரசன்!

பதிவு செய்த நாள் : 10 மே 2019

முன்னொரு காலத்தில், மதர்ஷியா நாட்டில், கேசவன் என்ற முனிவர் இருந்தார்; அவரிடம், பல நாடுகளிலிருந்து வந்த அரச குலச் சிறுவர்கள் கல்வி கற்றனர்.

யானை ஏற்றம், குதிரை ஏற்றம், மல்யுத்தம், வில் வித்தை போன்ற பயிற்சிகளும், ஏட்டுக் கல்வியும் அளித்த முனிவர், 'நான் நடத்தும் தேர்வுகளில், வெல்பவருக்கு, ஒரு புதுமையான பரிசு தருவேன்...' என்றார்.

போட்டிகள், சில காலம் நடந்தன. அனைத்திலும், மதர்ஷியா என்ற நாட்டு இளவசரன் நிகேஷன் வென்றான்.

பரிசாக, ஒரு மரக்குதிரையை அளித்த முனிவர், 'அரச குமாரர்களே... இது, பறக்கும் குதிரை; இதில், பல பொறிகள் உள்ளன; ஒரு பொறியை அழுத்தினால், உயரப் பறக்கும்...

'அழுத்த அழுத்த, வான மண்டல உச்சிக்கே போய் விடும்; இன்னொரு பொறியை அழுத்தினால், வட்டமிடும்; இன்னொரு பொறி இறங்குவதற்கு...' என்றார்.

'அந்த பொறிகள் எங்கே இருக்கின்றன...' என, கேட்டனர், இளவரசர்கள்.

'புத்திசாலிக்கு சொல்லித் தர வேண்டியதில்லை; பறக்கும் போது தெரிந்து கொள்வான்...' என்றார், முனிவர்.

குதிரையில் தாவி அமர்ந்த நிகேஷனிடம், 'இங்கிருந்து, 800 காத துாரத்தில் உள்ள அடர்ந்த காட்டில், ஒரு முனிவர் வாழ்கிறார்; அவரிடம் சென்றால், உதவி கிடைக்கும்...' என்றார் முனிவர்.

ஒரு விசையை அழுத்தினான் இளவரசன். மாயக்குதிரை, சிறகடித்து பறந்தது. அப்போது, எல்லா விசைகளையும் இயக்க கற்றுக் கொண்டான்.

மதியம், ஒரு சத்திரத்தில் இறங்கிச் சாப்பிட்டான். மாயக்குதிரையைப் பார்த்த மக்கள், வியந்து வாயடைத்து நின்றனர்.

மூன்றாவது நாள் காலை, ஒரு ஆசிரமத்தில் இறங்கியவனை, வரகு முனிவர், மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சில நாட்கள், அங்கு தங்கினான்.

அங்கிருந்து விடைபெற்ற போது, வரகு முனிவர் ஒரு கிளியைக் கொடுத்து, 'இதை எடுத்துச் செல்; இது ஒரு மாயக்கிளி; மனிதர்களைப் போல் பேசும்; உலகத்தில், எந்த இடத்தில், எது நடந்தாலும் அறிந்து சொல்லும்... இங்கிருந்து, 200 கல் தொலைவில், பச்சை கூம்பாச்சிக் காடு உள்ளது; அங்கு வாழும் பிருங்கி முனிவர் வேண்டிய உதவிகளைச் செய்வார்...' என்று கூறி, அனுப்பினார்.

பிருங்கி முனிவர் முன், மாயக்குதிரை இறங்கியது.

அவர் வரவேற்று உபசரித்து, 'சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறாய்; பக்கத்தில் உள்ள மேரு நாட்டில் இளவரசி சுந்தரவள்ளி சுயவரத்திற்கு ஏற்பாடுகள் நடந்தது.

'அதில் பங்கேற்ற இளவரசர்களை அடித்து வீழ்த்தி, அவளைத் துாக்கிச் சென்று விட்டான் ஒரு அரக்கன்... அவளை, மீட்க வேண்டியது உன் பொறுப்பு...

'ஒரு கைத்தடியைத் தருகிறேன்; அதை விண்ணில் ஏவினால், எதிரிகளை தாக்கி, மண்டையை உடைத்து விடும்...' என்று கூறி, கைத்தடியைக் கொடுத்தார்.

அதைப் பெற்று, பறக்கும் குதிரையில் ஏறிய நிகேஷன், 'இளவரசியை அரக்கன் எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்...' என்று கிளியிடம் கேட்டான்.

எதையும் அறிந்து சொல்லும் அந்தக் கிளி, 'லிங்கமலைக்கோட்டையில்...' என்றது.

'கோட்டை எங்குள்ளது...'

'இங்கிருந்து, தென் கிழக்குத் திசை நோக்கிப் பயணம் செய்தால், 9,000 கல் தொலைவிற்கு பின், அக்கோட்டை இருக்கிறது...'

'அந்த அரக்கன் யார்...'

'சித்தியசேனன்...'

'மிகவும் பலசாலியா...'

'ஆம்... அவனை வெல்வது அரிது...'

'அவனை வெல்ல, ஒரு உபாயம் சொல்...'

'அவன் உயிர் நிலை, அவனது இடக்கண்ணில் இருக்கிறது; அதை எடுத்துவிட்டால், அவன் பலம் பறிபோய்விடும்...' என்றது.

லிங்கமலையில், மாயக்குதிரை வட்டமடித்து இறங்கியது. குதிரையிலிருந்து, நிகேஷன் இறங்கினான். அரக்கன் உருவம் அவனுக்கு அச்ச மூட்டியது. இருப்பினும், தைரியத்தை வரவழைத்து, 'அரக்கனே... இளவரசி சுந்தரவள்ளியை விட்டு விடு...' என்றான்.

'விடாவிட்டால், என்ன செய்வாய்...' என்றான் அரக்கன்.

'உன்னுடன் போர் செய்வேன்...'

'இந்தச் சுண்டைக்காயா என்னுடன் மோதுவது...' என்றவாறே, நிகேஷனைத் துாக்கி விண்ணில் எறிந்தான். இளவரசன், ஏழு குட்டிக்கரணம் அடித்து, தரையில் உருண்டான்.

உடனே சுதாகரித்து, மந்திரக் கைத்தடியை எடுத்தான்.

'கைத்தடியே... அரக்கனின், இடது கண்ணைக் குத்தி வா...' என்று ஏவினான்.

கைத்தடி அம்பாக மாறி, அரக்கனின் இடது கண்ணைக் குத்தியது. அவன் நிலைதடுமாறி விழுந்தான். ஓடோடிச் சென்ற நிகேஷன், தன் உடைவாளால், அவன் உயிரைப் பறித்தான்; இளரவசி சுந்தரவள்ளியை மீட்டான்.

அவளை, பறக்கும் குதிரையில் ஏற்றி, நாட்டிற்கு அழைத்து வந்தான்.

ஒரு நல்ல நாளில், நிகேஷனுக்கும், சுந்தரவள்ளிக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தில், எல்லா நாட்டு அரசர்களும் பங்கேற்று வாழ்த்தினர்.

குட்டீஸ்... திடமனதுடன் செயல்பட்டால், எதிலும் வெற்றி பெறலாம்.