பைனலில் மும்பை: சென்னை மீண்டும் சொதப்பல்

பதிவு செய்த நாள் : 08 மே 2019 01:10


சென்னை:

ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி பைனலுக்கு முன்னேறி அசத்தியது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பரபரப்பாக நடந்த முதலாவது தகுதிச் சற்று போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப சென்னை அணி பரிதாபமாக தோற்றது, இந்த தொடரில் மும்பையிடம் மூன்றாவது முறையாக சென்னை தோற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 தொடர் நடக்கிறது. இந்த மெகா தொடரின் ‘பிளே&ஆப்’ சுற்று நேற்று துவங்கியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் உள்ளூர் அணியும் நடப்பு சாம்பியனுமான சென்னையை எதிர்த்து மும்பை மோதியது. இந்த தொடரின் லீக் சுற்றில் இரணடு முறையும் சென்னையை மும்பை வீழ்த்தி இருந்தது. இதனால், இம்முறை மும்பை அணிக்கு சென்னை பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. தவிர, இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இரு அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டன. சென்னை அணியில் கேதர் ஜாதவ் இடத்தில் முரளி விஜய் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் மெக்லீனகன் நீக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் தேர்வானார்.

சென்னை அணிக்கு டுபிளசி, வாட்சன் இருவரும் துவக்கம் தந்தனர். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை ராகுல் சஹார் வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் டுபிளசி (6) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 5 ரன் எடுத்த நிலையில், ஜெயந்த் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வழக்கம் போல் வாட்சன் (10) சொதப்ப சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், முரளி விஜயுடன் அம்பதி ராயுடு இணைந்தார்.

மண்ணின் மைந்தனான முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதே நேரம் மும்பை அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் சிறப்பாக இருந்தது. முரளி விஜய் 26 ரன் (26 பந்து, 3 பவுண்டரி) எடுத்த நிலையில், ராகுல் சஹார் பந்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே கேப்டன் தோனி களம் வந்தார். இவரும் ராயுடுவும் பொறுப்புடன் விளையாடி வந்தனர். 17.1 ஓவரில் சென்னை 100 ரன் கடந்தது. ஆட்டத்தின் 19வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் தோனி தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. அம்பதி ராயுடு 42 (37 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தோனி 37 (29 பந்து, 3 சிக்சர்) ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 66 ரன் சேர்த்தது. மும்பை தரப்பில் ராகுல் சஹார் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். ஜெயந்த் யாதவ், குர்ணால் பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

எளிதான இலக்கை துரத்திய மும்பை அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. தீபக் சஹார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய குயின்டன் டி காக், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் ‘சுழலில்’ கேப்டன் ரோகித் சர்மா (8) சிக்கினார். பின் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் இணைந்தனர். இருவரும் சென்னை பந்துவீச்சை அடித்து நொறுக்க ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. 13.2 ஓவரில் மும்பை 100 ரன் எடுத்த போது இந்த அணியின் வெற்றி பிரகாசமானது. இதை உறுதி செய்யும் வகையில் சூர்யகுமார் யாதவ் 37 பந்தில் அரைசதம் அடித்தார், இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த நிலையில், இம்ரான் தாகிர் பந்தில் இஷான் கிஷான் (28) போல்டானார். அடுத்த பந்தில் குர்ணால் பாண்ட்ழா ‘டக்—அவுட்’ ஆக ஆட்டம் சூடுபிடித்தது.

இருந்தும் சூர்யகுமார் யாதவ் அசத்த மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 71 (54 பந்து, 10 பவுண்டரி), ஹர்திக் பாண்ட்யா (13) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை தரப்பில் இம்ரான் தாகிர் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். தீபக் சஹார், ஹர்பஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்ற மும்பை அணி பைனலுக்கு முன்னேறியது. தோற்ற சென்னை அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. விசாகப்பட்டினத்தில் இன்று நடக்க உள்ள ‘எலிமினேட்டர்’ சுற்றில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறிவிடும். மாறாக வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னையை எதிர்த்து விளையாடும்.