மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 152

பதிவு செய்த நாள் : 07 மே 2019

‘ஆ! அடியார் அமுது செய்ய இன்னும் ஓர் இடையூறோ!’ என்று சிறுத்தொண்டர் நினைத்து ஏங்கிட, வெளியே ஒடித் திரிந்து எங்கு தேடியும் சிவனடியார் எவரும் கிடைக்கப்பெறாமல் வாடிய முகத்தோடு வீட்டிற்குத் திரும்பி வந்து சங்கமரிடம் ‘‘நெற்றியில் திருநீறு அணிந்த சிவனடியார் ஒருவரையும் காணவில்லையே? நான் என் செய்வேன்? உலகத்தில் திருநீறு அணிபவர்களுக்கே அடியேன் சோறு இடுவது வழக்கம்’’ என்று கூறினார்.

 அதைக் கேட்டதும் சங்கமர் சிரித்து, ‘‘உம்மைப் போல் திருநீறு அணிந்த அடியவர்களும் உண்டோ? நீரே என்னுடனிருந்து உண்பீராக’’ என்று கூறி, திருவெண்காட்டு அம்மையாரை நோக்கி, ‘இவருக்கு வேறொரு பரிகலம் திருத்தி இறைச்சியும் அன்னமும் கலந்து நமக்கு பரிமாறியதிலிருந்து  எடுத்து இவருக்கும் பரிமாறுக’ என்றார்.

 அவ்வம்மையாரும் அங்ஙனமே எடுத்துப் படைத்தார்.

 உடனே சிறுத்தொண்டர் பைரவச் சங்கமரை உண்பிக்க வேண்டி முன்னதாக தாம் விரைந்து, உணவுண்ணப் புகுந்தார். அதைக் கண்ட பைரவச் சங்கமர் ‘நாம் உண்பதற்குமுன் நீ உண்ணப் புகுந்த காரணம் என்ன?  நாமோ ஆறு மாதங்கள் கழித்து உணவு உண்போம்! நீரோ நாள்தோறும் உண்பவர். அப்படியிருக்க, நீர் எமக்கு முன்னதாக உண்ணப் புகுந்தது என்ன? சற்றுப் பொறும்! உமக்கொரு மைந்தன் இருந்தானே  நம்முடன் இருந்து உணவுண்ண உம்முடைய மகனை உடனே அழையும்!’ என்றார்.

 அதற்கு சிறுத்தொண்டர் ‘எனக்கொரு புதல்வன் உண்டு! ஆனால் அவன் இப்பொழுது உதவமாட்டான்’ என்றார்.

 ‘உம் மகன் இங்கு வந்தால்தான் நாம் அமுது உண்ண முடியும், ஆகவே அவனைத் தேடி அழைத்து வாரும்’ என்றார் சங்கமர்.

 அதைக் கேட்ட சிறுத்தொண்டர், ‘நாம் என்ன செய்தால்தான் இவர் திருவமுது செய்தருள்வார்?’ என்று யோசித்துப் பிறகு தம் மனைவியாரோடு வெளியே வாசலுக்குச் சென்று ‘மைந்தா! வருவாய்’ என்று கூவியழைத்தார். அவருடைய மனைவியாரும் தன் கணவரைப் பின்பற்றி ‘கண்மணியே! சீராளா! ஓடிவா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உன்னை அழைக்கின்றார். ஓடி வா!’ என்று கூவியழைத்து ஓலமிட்டார்.

 அப்போது சிவபெருமானுடைய திருவருளினால் பாலகன் சீராளதேவன் பள்ளிக்கூடத்தினின்றும் ஓடி வரும் பிள்ளை போல் எதிரே ஓடி வந்தான். அம்மையார் அப்பாலகனைத் தன் கைகளால் எடுத்துக் கட்டித் தழுவிக்கொண்டு பெருங்களிப்போடு, தம் கணவர் கையில் கொடுத்தார்.  சிறுத்தொண்டர் மனமகிழ்ச்சி அடைந்து, ‘இனி சிவனடியார் திருவமுது உண்ண தடையேயில்லை’ என்று துணிவினால் மைந்தனைத் தூக்கிக் கொண்டு அடியவரைத் திருவமுது செய்விப்பதற்கு உள்ளே வந்தார். ஆனால் அதற்கு முன்பே பைரவச் சங்கமராக வந்த சிவபெருமான், மறைந்துவிட்டார். ‘சிறுத்தொண்டர் அவரைக் காணாது மிகவும் சிந்தை கலங்கினார். திகைத்தார். மயக்கமுற்றார். மண்ணிலே விழுந்தார்.   பின் எழுந்து பரிகலத்திலே இறைச்சிக் கறியமுதும், காணாம மறைந்து போயிருப்பதைக் கண்டு மேலும் அச்சமடைந்தார். ‘நான் மகிழ அமுதுண்ணாமல் பைரவச் சங்கமர் எங்கே சென்றார்?’ என்று சிந்தை மயங்கியவாறே அவரைத் தேடி வெளியே வந்தார்.

 மறைந்தருளிய பைரவச் சங்கமராகிய சிவபெருமா,ன் உமாதேவியாரோடும் மைந்தன் முருகப்பெருமானாரோடும்  வெள்ளிடை மேல் ஆகாய வீதியில் வெளிப்பட்டு எழுந்தருளி, பூதகண நாதரும் தேவர்களும் முனிவர்களும் போற்றியிசைக்க, சோமாஸ்கந்தப் பெருமாளாகக் காட்சியளித்தார்.

 அதைச் சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், மைந்தரும், தாதியாரும் கண்டு தரிசித்துப் பரவசமடைந்து தங்களது அன்பும், மனமும் கரைந்துருக, நிலமுற வீழ்ந்து உமாதேவியாரும் வெற்றி பொருந்திய நீண்ட வேலினை ஏந்திய முருகப்பெருமானும் தங்கள் திருவடிகளின்கீழ் வீழ்ந்து துதித்து நின்ற சிவத்தொண்டரையும், அவரது மனைவி திருவண்காட்டு நங்கையரையும், பிள்ளை சீராள தேவரையும் சந்தனத் தாதியையும், என்றும் தங்களைப் பிரியாதே வணங்கி இன்புற்றிருக்குமாறு தங்கள் சிவலோகத்துக்குத் தங்களுடனேயே அழைத்துக்கொண்டு சென்றார்கள். சிவனடியாருக்கு அமுதூட்டத் தம் ஒரே மைந்தனையும் அறுத்து கரியமுதாக்கிப் பெரும் பேறு பெற்ற சிறுத்தொண்டரின் சேவடிகளை வணங்கிவிட்டு அடுத்ததாக கழறற்றியாரின் திருத்தொண்டை விளம்புகிறேன்.

 ‘செங்காட்டங்குடி மேயே சிறுத்தொண்டருக்கு அடியேன்’ என்றார் சுந்தரர்.

திருமகள் வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பும், மிகப் பழமையும் உடையது மலைநாடு! அந்நாட்டிலே, புழதமிழ்ப் பாடல்களில் புகழ்ந்து கூறப்படும் சேரம் மன்னர் மரபினர் வழிவழி வீற்றிருந்து செங்கோல் நடத்தும் சிறந்த நகரம் கொடுங்கோளூர் – இது ஊரின் பெயர். இது திருச்சூர் நிலையத்திலிருந்து கற்சாலை வழியே  சுமார் 23 மைலில் உள்ள புல்லாற்றுக்கரை என்னும் கடற்கழித் தோணித்துறைக்குச் சென்று அங்கிருந்து நாட்டுத்தோணி மூலம் இரண்டு மைல் அளவில் திருவஞ்சைகளத்துத் துறையினை அடையத்தக்கது.

 கொடுங்கோளூர் சாலையில் பயிலப்படும் வேத ஒலியும், யானைக் கன்றுகளின்   பிளிறல் ஒலியும்,  சோலைகளில் மெல்லிய வண்டுகள் பண் பாடும் மெல்லிய ஓசையும், குதிரைகளின் கனைப்புச் சத்தமும், பாலை விபஞ்சியாழின் ஒலியும், ஆடல் பாடல்களுக்கு இசைய முழங்கும், இசை ஒலியும் ஒன்று கூடி, கடலோசையையும், விழுங்கி மேலோங்கி விளங்கும் செல்வமிக்க வீடுகள்தோறும், விதவிதமான இல்லற இன்பங்கள் விளையும், சாலைகள்தோறும் சத்துப் பிடியான தர்மங்கள் பெருகும். அன்பர்களின் திருமடங்கள்தோறும், சைவத்தின் உண்மைகள் எடுத்துக்கூறப்படும். பிற இடங்களிலெல்லாம் பல்வகைச் செல்வங்கள் பிரகாசிக்கும்.