வெளியேறியது கோல்கட்டா: மும்பை முதலிடம்

பதிவு செய்த நாள் : 05 மே 2019 23:45


மும்பை:

ஐ.பி.எல்., தொடரில் வெற்றி அவசியம் என்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப மும்பையிடம் கோல்கட்டா வீழ்ந்தது. இந்த தோல்வியால் ‘பிளே-ஆப்’ வாய்ப்பை ஐதராபாத் பெற்றது. தவிர வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதித்தது/

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 56வது மற்றும் கடைசி லீக் போட்டியில் உள்ளூர் அணியான மும்பையை எதிர்த்து கோல்கட்டா மோதியது. மும்பை அணி ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இப்போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கோல்கட்டா இருந்தது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தது. கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின், சுவப்மன் கில் இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். ஹர்திக் பாண்ட்யா வேகத்தில் சுவப்மன் கில் (9) சரிந்தார். பின் கிறிஸ் லின்னுடன் உத்தப்பா இணைந்தார். கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி அசத்தினார். அதே நேரம் துவக்கம் முதலே உத்தப்பா, ரன் எடுக்க திணறினார். மீண்டும் அசத்திய ஹர்திக் பாண்ட்யா கிறிஸ் லின் விக்கெட்டை வீழ்த்தினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், கிறிஸ் லின் 41 ரன் (29 பந்து, 2 புவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து வெளியேறினார். முக்கிய கட்டத்தில் மலிங்கா திருப்புமுனை தந்தார். இவரது வேகத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக் (3), ரசல் (0) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். மலிங்கா வீசிய சூப்பர் பவுன்சரில் ரசல் ‘டக்&அவுட்’ ஆக அரங்கமே அதிர்ந்தது.

தொடர்ந்து உத்தப்பா சொதப்ப கோல்கட்டா ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதே நேரம் நிதீஷ் ரானா (26) ஓரளவு கைகொடுத்தார். கடைசி ஓவரில் உத்தப்பா ஆட்டமிழந்தார். இவர் 40 ரன் (47 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். கடைசி பந்தில் ரிங்கு சிங் (4) ஆட்டமிழந்தார். முடிவில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்  இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. சுனில் நரைன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை தரப்பில் மலிங்கா 3, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் அதிரடி துவக்கம் தந்தார். இவருக்கு கேப்டன் ரோகித் கம்பெனி கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ரன் (6.1 ஓவர்) சேர்த்த நிலையில், கிருஷ்ணா வேகத்தில் குயின்டன் டி காக் சரிந்தார். இவர் 30 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் வந்தார். இந்த நேரத்தில் ரோகித் அதிரடியில் இறங்கினார். இவர் 44 பந்தில் அரைசதம் அடித்தார். முடிவில் மும்பை அணி 16.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா (55), சூர்யகுமார் யாதவ் (46) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா தரப்பில் கிருஷ்ணா 1 விக்கெட் சாய்த்தார்.

இந்த வெற்றியால் மும்பை அணி ரன்ரேட் அடிப்பபடையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. சென்னை மற்றம் டில்லி அணிகள் முறையே 2 மற்றம் 3வது இடத்தைப் படித்தன. கோல்கட்டாவின் இந்த படுதோல்வியால் ஐதராபாத் அணி ‘பிளே-ஆப்’ வாய்ப்பை பெற்றது. சென்னையில் நாளை நடக்கும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்த்து மும்பை மோதுகிறது.