தப்பியது கோல்கட்டா... பஞ்சாப் ‘பஞ்சர்’

பதிவு செய்த நாள் : 04 மே 2019 01:06


மொகாலி:

ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணி ‘பிளே&ஆப்’ வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. அதே நேரம் தோல்வியுற்ற பஞ்சாப் அணி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 தொடர் நடக்கிறது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நேற்று இரவு நடந்த 52வது லீக் போட்டியில் உள்ளூர் அணியான பஞ்சாபை எதிர்த்து முன்னாள் சாம்பியன் கோல்கட்டா மோதியது. இரு அணிகளும் தான் விளையாடிய 12 ஆட்டத்தில் தலா 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் எடுத்திருந்தன. எனவே இன்றைய போட்டி இரு அணிக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. அதாவது இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என இருந்தது. வெற்றி பெறும் அணி ‘பிளே&ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். மாறாக தோற்கும் அணி முதல் சுற்றுடன் மூட்டையை கட்ட வேண்டிய நிலையில் இருந்தது. இதனால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் மாற்றம் ஏதும் இல்லை. அதே நேரம் பஞ்சாப் அணியில் மில்லர், முஜீப் உர் ரஹ்மான் நீக்கப்பட்டு ஷாம் குர்ரன், ஆன்ட்ரு டை சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணிக்கு சந்தீப் வாரியர் வேகத்தில் தொல்லை கொடுத்தார். இனரது வேகத்தில் ராகுல் (4), கிறிஸ் கெய்ல் (14) சரிந்தனர். பின் மயாங்க் அகர்வாலுடன் நிகோலஸ் பூரன் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு சரிவிலிருந்து அணியை மீட்டனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், நிதீஷ் ரானா ‘சுழலில்’ பூரன் சிக்கினார். இவர் 48 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். 12 ஒவர் முடிவில் பஞ்சாப் 100 ரன் எடுத்தது.

முக்கிய கட்டத்தில் மயாங்க் அகர்வால் (36), மன்தீப் சிங் (25) கைகொடுத்தனர். இந்த நேரத்தில் ஷாம் குர்ரன் ‘ருத்ரதாண்டவம்’ ஆடினார். எதிரணி ப்நது வீச்சை நாலா புறமும் பறக்கச் செய்ய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. தவிர, பவுண்டரி, சிக்சர் என விளாச அரங்கமே அதிர்ந்தது, அதே நேரம் ரசல் பந்தில் கேப்டன் அஷ்வின் (0) கிளீன் போல்டானார். தொடர்ந்து விளாசிய குர்ரன் 23 பந்தில் அரைசதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. குர்ரன் 55 (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஆன்ட்ரு டை (0) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா தரப்பில் சந்தீப் வாரியர் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். குர்னே, ரசல், ரானா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின் அதிரடி துவக்கம் தந்தார். எதிரணி பந்து வீச்சை இவர் அடித்து நொறுக்க, மறு முனையில் சுவப்மன் கில் அமைதி காத்தார். ஒரு ஓவருக்கு மிக எளிதாக 10 ரன்கள் கிடைத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (6 ஓவர்) சேர்த்த நிலையில், ஆன்ட்ரு டை பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து கிறிஸ் லின் ஆட்டமிழந்தார். இவர் 46 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அடுத்து உத்தப்பா களம் வந்தார். இவரும் ‘டாப்கியரில்’ எகிற ஆட்டம் சூடுபிடித்தது. 10.2 ஓவரில் கோல்கட்டா 100 ரன் எடுத்தது. அஷ்வின் ‘சுழலில்’ உத்தப்பா (22) சிக்கினார். பலத்த கரகோஷத்திற்கு இடையே ரசல் களம் வந்தார். இந்த நேரத்தில் சுவப்மன் கில் 36 பந்தில் அரைசதம் கடந்தார்.

முக்கிய கட்டத்தில் முகமது ஷமி திருப்புமுனை தந்தார். இவரது வேகத்தில் ரசல் 24 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். இருந்தும் கோல்கட்டா அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுவப்மன் கில் 65 (49 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (17) அவுட்டாகாமல் இருந்தனர். பஞசாப் தரப்பில் முகமது ஷமி, ஆன்ட்ரு டை, அஷ்வின் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இந்த வெற்றியால் கோல்கட்டா அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. தோற்ற பஞ்சாப் அணியின் ‘பிளே&ஆப்’ கனவு தகர்ந்தது.