பிளே-ஆப் சுற்றில் மும்பை:சூப்பர் ஓவரில் ஐதராபாத் ‘அவுட்’

பதிவு செய்த நாள் : 03 மே 2019 01:06


மும்பை,:

ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி ‘பிளே&ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முக்கிய லீக் போட்டியில் இந்த அணி சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி அசத்தியது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 நடக்கிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் உள்ளூர் அணியும் முன்னாள் சாம்பியனுமான மும்பையை எதிர்த்து ஐதராபாத் மோதியது. இப்போட்டி இருஅணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. மும்பை வெற்றி பெற்றால் ‘பிளே&ஆப்’ வாய்ப்பை உறுதி செய்யும். மாறாக, ஐதராபாத் வெற்றி பெற்றால் ‘பிளே&ஆப்’ வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்ற நிலை இருந்தது. அதே நேரம் ஐதராபாத் தோற்றால் சிக்கல் ஆகி விடும் என்ற நிலை இருந்தது.

பலத்த எதிர்பார்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். மும்பை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. அதே நேரம் ஐதராபாத் அணியில் வார்னர், சந்தீப் சர்மா இடத்தில் கப்டில், பாசில் தம்பி சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் சுமாரான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 36 ரன் (5.2 ஓவர்) சேர்த்த நிலையில், கலீல் அகமது வேகத்தில் ராகித் சர்மா (24) சரிந்தார். தொடர்ந்து அசத்திய கலீல் இம்முறை சூர்யகுமார் யாதவ் (23) விக்கெட்டை வீழ்த்தினார். முகமது நபி பந்தில் எவின் லூயிஸ் (1) நடையை கட்டினார். சீரான இடைவெயில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஒருமுனையில் குயின்டன் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13.3 ஓவரில் மும்பை 100 ரன் எடுத்தது. கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 18 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

பொறுப்புடன் விளையாடிய குயின்டன் டி காக் 48 பந்தில் அரைசதம் கடந்தார். முக்கிய கட்டத்தில் போலார்டும் (10) கைகொடுக்கவில்லை, முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. குயின்டன் டி காக் 69 (58 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குர்ணால் பாண்ட்யா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார், முகமது நபி தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு கப்டில், சகா இருவரும் துவக்கம் தந்தனர். ‘டாப் கியரில்’ எகிறிய சகா, சரண், மலிங்கா பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். அதே நேரம் கப்டில் சற்று பதற்றத்துடன் விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40 ரன் (4 ஓவர்) சேர்த்த நிலையில், பும்ரா வேகத்தில் சகா சரிந்தார். இவர் 25 ரன் (15 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். தொடர்ந்து அசத்திய பும்ரா, இம்முறை கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 10 ரன் எடுத்தார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் (3) வெளியேறி திர்ச்சி கொடுத்தார்.

ஒருமுனையில் மணிஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். வழக்கம் போல் தான் சந்தித்து முதல் பந்தில் பவுண்டரி அடித்து தனது கணக்கை துவக்கினார். இவருக்கு விஜய் சங்கர் கம்பெனி கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், குர்ணால் பந்தை தூக்கி அடித்த விஜய் சங்கர் ) போலார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இளம் வீரர் அபிஷேக் வர்மா (2) கைகொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய பாண்டேவுடன் முகமது நபி இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டே 37 பந்தில் அரைசதம் அடித்தார். 3 ஓவரில் 41 ரன் தேவைப்பட்டது. கடைசி கட்டத்தில் பும்ரா, மலிங்கா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். பும்ரா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் பாண்டே அடுத்தடுத்து இரண்டு புவுண்டரிகள் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது.

கடைசி ஓவரில் 17ரன் தேவைப்பட ஹர்திக் பாண்ட்யா பந்து வீச வந்தார். முதல் இரண்டு பந்தில் தலா 1 ரன் கிடைக்க 3வது பந்தில் முகமது நபி சிக்சர் அடித்தார். 4வது பந்தில் நபி (31) ஆட்டமிழந்தார். 5வது பந்தில் பாண்டே பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் 2 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில், பாண்டே சிக்சர் அடிக்க ஆட்டம் ‘டை’யில் (சமன்) முடிந்தது. அதாவது ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 71 ரன் (47 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ரஷித்கான் (0) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து ‘சூப்பர் ஓவர்’ நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் 0.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிங்கிய மும்பை 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது.