சென்னை மீண்டும் ‘நம்பர்-1’: டிலலியை வீழ்த்தி அசத்தல்

பதிவு செய்த நாள் : 02 மே 2019 00:14


சென்னை:

ஐ.பி.எல்., தொடரில் டில்லிக்கு எதிரான லீக் போட்டியில் ரெய்னா (59 ரன்), ஜடேஜா (25 ரன், 3 விக்கெட்), இம்ரான் தாகிர் (4 விக்கெட்) கைகொடுக்க 80 ரன்னில் அபார வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் ‘நம்பர்-1’ இடத்தைப் பிடித்து அசத்தியது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 தொடர் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 50வது லீக் போட்டியில் உள்ளூர் அணியும் நடப்பு சாம்பியனுமான சென்னையை எதிர்த்து டில்லி மோதியது. இரு அணிகளும் ஏற்கனவே ‘பிளே&ஆப்’ சுற்றுக்கு முன்னேறியதால் இப்போட்டி ஒரு சம்பிரதாய ஆட்டமாக அமைந்தது. இருந்தும் இதில், வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில், ‘டாஸ்’ வென்ற டில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய், சான்ட்னர், துருவ் ஷோரி நீக்கப்பட்டு தோனி, டுபிளசி, ஜடேஜா சேர்க்கப்பட்டனர். டில்லி அணியில் ரபாடா, இஷாந்த் இடத்தில் பவுல்ட், ஜெகதீசா சுசித் இடம் பெற்றனர்.

சென்னை அணிக்கு வாட்சன், டுபிளசி இருவரும் துவக்கம் தந்தனர். 9 பந்துகளை வீண் செய்தி வாட்சன், ஜெகதீசா சுசித் பந்தில் ‘டக்&அவுட்’ஆனார். அடுத்து ரெய்னா களம் வந்தார். டில்லி பவுலர்கள் அசத்த டுபிளசி அமைதிகாத்தார். அதே நேரம் ரெய்னா சற்றே அதிரடியில் இறங்கினார். டுபிளசி 39 ரன் (41 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அக்சர் படேல் ‘சுழலில்’ சிக்கினார். பின் ரெய்னாவுடன் கேப்டன் தோனி இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா 34 பந்தில் அரைசதம் அடித்தார். இதையடுத்து சென்னை அணி 14.3 ஓவரில் 100 ரன் எடுத்தது. முக்கிய கட்டத்தில் ரெய்னா ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவர் 59 ரன் (37 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து வந்த ஜடோ 10 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 25 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் தோனி ‘ருத்ரதாண்டவம்’ ஆடினார். எதிரணி பந்து வீச்சை நாலா புறமும் பறக்க செய்ய ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. தவிர தோனியின் அதிரடியை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இவருக்கு அம்பதி ராயுடு கம்பெனி கொடுத்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. கடைசி 5.3 ஓவரில் சென்னை 79 ரன்கள் எடுத்தது. தோனி 44 (22 பந்து, 4 புவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு (5) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி தரப்பில் ஜெகதீசா சுசித் 2, கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய டில்லி அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. தீபக் சஹார் வேகத்தில் பிரித்வி ஷா (4) சரிந்தார். பின் தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, இந்த நிலையில், ஹர்பஜன் பந்தில் தவான் (19) கிளீன் போல்டானார். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ இளம் வீரர் ரிஷாப் பன்ட் (5), அக்சர் படேல் (9), ரூதர்போர்டு (2) சிக்கினர். தன்பங்கிற்கு இங்க்ராம் (1), கிறிஸ் மோரிஸ் (0) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். யதாடர்ந்து அசத்திய ஜடேஜா இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். டில்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்து திணறியது. ஜெகதீசா சுசித் (6) பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

கடைசியாக இம்ரான் தாகிர் பந்தில் அமித் மிஸ்ரா (8) சிக்க டில்லி அணி 16.2 ஓவரில் 99 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. பவுல்ட் (0) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய இம்ரான் தாகிர் 4 (3.2-0-1&4), ஜடேஜா 3 (3-0-9-0) விக்கெட்டை வீழ்த்தினர். தீபக் சஹார், ஹர்பஜன் சிங் தலா 1 விக்கெட் சாய்த்தனர். பவுலிங்கில் அசத்திய இம்ரான் தாகிர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி துவரை விளையாடிய 13 போட்டியில் 9 வெற்றி, 4 தோல்வி என மொத்தம் 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. தவிர சென்னையில் நடந்த 7 லீக் ஆட்டத்தில் தோனி அன் கோ 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.