மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள் : 01 மே 2019 13:09

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள முக்கியத் கோயில்களில் இந்த ஆண்டு நல்ல பருவ மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறிவுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அறநிலையத்துறை சுற்றறிக்கையில், பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டும். நந்தி பெருமானுக்கு நீர்த் தொட்டி கட்டி, நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய வேண்டும்.

ஓதுவார்களைக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமறையையும் திருஞானசம்பந்தரின் 12 திருமறையில் தேவார மழைப் பதிகத்தையும் பாட வேண்டும் .

மழை வேண்டி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கு சீதள கும்பம் மற்றும் ருத்ராபிஷேகமும், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம், வருண சூக்த வேத மந்திர பாராயணம், வருண காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்டவை செய்து வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள திருப்புன்கூர் சிவன் கோயிலில் உள்ள மகாநந்திக்கு மகாபிஷேகம் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிபாடுகளை கோயில் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு கற்றறிந்தவர்களைத் தேர்வு செய்து செய்ய வேண்டும் என்றும் இந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட அனைத்து இணை ஆணையர்கள், அனைத்து இணை ஆணையர்/ செயல் அலுவலர்கள், அனைத்து துணை ஆணையர், அனைத்து துணை ஆணையர்/ செயல் அலுவலர்கள், அனைத்து உதவி ஆணையர்கள்,  அனைத்து உதவி ஆணையர்/ செயல் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.