ஐதராபாத்திடம் பஞ்சாப் ‘பஞ்சர்’

பதிவு செய்த நாள் : 30 ஏப்ரல் 2019 01:52


ஐதராபாத்:

ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் வார்னர் (81), ரஷித்கான் (3 விக்கெட்) அசத்த 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத், ‘பிளே&ஆப்’ வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்&12 தொடர் நடக்கிறது. ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் நேற்று இரவு நடந்த 48வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியும் முன்னாள் சாம்பியனுமான ஐதராபாத்தை எதிர்த்து பஞ்சாப் மோதியது. இரு அணிக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில், ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் அஷ்வின் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு வார்னர், சகா இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். குறிப்பாக சகா ‘டாப்கியரில்’ எகிறினார். இவருடன் வார்னரும் சேர்ந்து கொள்ள ஆட்டம் சூடுபிடித்தது, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன் (6.2 ஓவர்) சேர்த்த நிலையில், முருகன் அஷ்வின் ‘சுழலில்’ சகா சிக்கினார். இவர் 28 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 9.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன் எடுத்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்த நேரத்தில் வார்னர் 38 பந்தில் அரைசதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. ஆட்டத்தின் 16வது ஓவரை அஷ்வின் வீச வந்தார். இந்த ஓவரின் 3வது பந்தில் மணிஷ் பாண்டே 36 (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் வார்னர் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், வார்னர் 81 (56 பந்து, 7 புவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்து வெளியேற ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தவிர ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், பஞ்சாப் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

முக்கிய கட்டத்தில் முகமது நபி (20), கேப்டன் வில்லியம்சன் (14) கைகொடுத்தனர். ரஷித்கான் (1) ஏமாற்றினார். முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் (7), அபிஷேக் சர்மா (5) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அஷ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல் (4) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மயாங்க் அர்வால் (27), பூரான் (21), மில்லர் (11) ஏமாற்றினர். கேப்டன் அஷ்வின் ‘டக்&அவுட்’ ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த போதும் ஒருமுனையில் போராடிய ராகுல் 38 பந்தில் அரைசதம் அடித்தார்.

முக்கிய கட்டத்தில் கலீங் அகமது திருப்புமுனை தந்தார். இவரது வேகத்தில் ராகுல் 79 ரன் (56 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து வெளியேற ஐதராபாத் வெற்றி உறுதியானது. சிம்ரன் சிங் (17), முஜீப் உர் ரஹ்மான் (0) நடையை கட்டினார். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து பரிதாபமாக தோற்றது. முருகன் அஷ்வின் (1), முகமது ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், கலீல் அகமது தலா 3, சந்தீப் சர்மா 2 விக்கெட் சாய்த்தனர். பேட்டிங்கில் கலக்கிய வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்ப்டடார்.