அப்பாடா... கோல்கட்டா வெற்றி: ரசல், கில் விளாசல்

பதிவு செய்த நாள் : 29 ஏப்ரல் 2019 00:38


கோல்கட்டா:

ஐ.பி.எல்., தொடரில் மும்பைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் ரசல் 40 பந்தில் 80 ரன் விளாச 34 ரன் வித்தியாசத்தில் கோல்கட்டா வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கோல்கட்டாவின் ‘பிளே&ஆப்’ கனவு நீடிக்கிறது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 நடக்கிறது. கோல்கட்டா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 47வது லீக் போட்டியில் உள்ளூர் அணியான கோல்கட்டாவை எதிர்த்து மும்பை மோதியது. இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதில், ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார்.

கோல்கட்டா அணிக்கு சுவப்மன் கில், கிறிஸ் லின் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். குறிப்பாக, கில் அனாயசமாக விளையாடி ரன் குவித்து வந்தார். ஒருகட்டத்தில் இவருடன் கிறிஸ் லின் தன்னை இணைத்துக் கொள்ள ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. இவர்கள் இருவரும் ஒரு ஓவருக்கு மிக எளிதாக பத்து ரன்கள் எடுத்து வந்தனர். அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 27 பந்தில் அரைசதம் அடித்தார். 10.1 ஓவரில் கோல்கட்டா 100 ரன் எடுத்தது. இதையடுத்து இப்போட்டியில் மிகப் பெரிய ஸ்கோரை கோல்கட்டா அணி பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நேரத்தில் சுவப்மன் கில் 32 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க 6 பவுலர்களை ரோகித் சர்மா பயபடுத்தினார்.

இறுதியாக ராகுல் சஹார் ‘சுழலில்’ கிறிஸ் லின் சிக்கினார். இவர் 54 ரன் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 96 ரன் (9.3 ஓவர்) சேர்த்தது. அடுத்து ரசல் களம் இறக்கப்பட்டார். இவர் எடுத்த எடுப்பில் ‘டாப்கியரில்’ எகிற ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரசலுக்கு துவக்கத்தில் எவின் லூயிஸ் கேட்சை கோட்டை விட்டார். அந்த நேரத்தில் ரசல் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவப்மன் கில் ஹர்திக் பாண்ட்யா பந்தை சிக்சர் அடிக்க முயன்று எவின் லூயிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கில் 76 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

இதன் பின் ரசல் ‘ருத்ரதாண்டவம்’ ஆடினார். இவருக்கு பந்து வீச பும்ராவே பயந்தார். மலிங்கா பந்து வீச்சை ரசல் அடித்து நொறுக்கினார். இவருக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் கம்பெனி கொடுத்தார். எதிரணி பந்து வீச்சை ரசல் நாலா புறமும் பறக்க செய்ய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 18.2 ஓவரில் கோல்கட்டா 200 ரன் எடுத்தது. முடிவில் கோல்கட்டா அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. ரசல் 80 (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் (15) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சஹார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய மும்பை அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. சுனில் நரைன் பந்தில் குயின்டன் டி காக் ‘டக்&வுட்’ ஆனார். 3 பவுண்டரிகள் உட்பட 12 ரன் எடுத்த நிலையில், குர்னே வேகத்தில் ரோகித் நடையை கட்டினார். ரசல் வேகத்தில் எவின் லூயிஸ் (15), சூர்யகுமார் யாதவ் (2) சரிந்தனர். போலார்டு (20) கைகொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய ஷர்திக் பாண்ட்யா விளாசத் துவங்கினார். இவர் சிக்சர் மழை பொழிய ஆட்டம் சூடுபிடித்தது. பாண்ட்யா 17 பந்தில் அரைசதம் அடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், குர்னே பந்தில் ஹர்திக் பாண்ட்யா 91 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழந்தார். 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. சாவ்லா வீசிய கடைசி ஓவரில் குர்ணால் பாண்ட்யா (24) ஆட்டமிழந்தார்.

முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து தோல்வியுற்றது. பரீந்தர் சரண் (3), ராகுல் சஹார் (1) அவுட்டாகாமல் இருநதனர். கோல்கட்டா தரப்பில் சுனில் நரைன், ரசல், குர்னே தலா 2 விக்கெட் சாய்த்தனர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கிய ரசல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.