கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக மைசூரு தேவாலயத்திற்கு முஸ்லிம்கள் திரண்டு வர இஸ்லாமிய தலைவர் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 27 ஏப்ரல் 2019 17:31

மைசூரு,

இலங்கை தேவாலயங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலால் துயரமடைந்துள்ள கிறிஸ்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மைசூரு செயிண்ட் பிலோமினா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனையின் போது இஸ்லாமியர்கள் திரளாக வெளியே நிற்க வேண்டும் என்று ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மைசூரு பிரிவின் தலைவர் முனாவ்வர் பாஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் மூலம் நாம் எப்போதும் ஒற்றுமையுடன் இருப்போம். சிலரது வெறுப்பு நம்மை பிரித்தாள முடியாது என்பதை காட்ட வேண்டும் என்று முனாவ்வர் பாஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் ஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம்:

கடந்த மாதம் நியூஸிலாந்த் மசூதிகளில் நடந்த கொடூர தாக்குதலுக்கு பின் அங்கு நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பிற மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மசூதி வெளியே முஸ்லிம்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

அவர்கள் காட்டிய ஆதரவால் நியூஸிலாந்து இஸ்லாமிய சமூகம் மனம் நெகிழ்ந்தது. அன்றைய தினம் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயிரக் கணக்கான மக்கள் இனம் மதம் என்ற பாகுபாடுகளை கடந்து ஒன்றாக இணைந்து நின்றனர்.

இதேபோல் உலகின் பல இடங்களில் கிறிஸ்துவர்கள், யூதர்கள், சீக்கியர்கள் உட்பட பிற மதத்தினர் மசூதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

இந்நிலையில் நியூஸிலாந்தில் நடந்ததை போலவே இந்த மாதம் இலங்கையில் பிராத்தனையின்போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பல அப்பாவி கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த துயரமான நேரத்தில் கிறிஸ்துவர்களுக்கு நம் ஆதரவை தெரிவிக்கும் வகையில், மைசூரின் முக்கிய தேவாலயமான செயிண்ட் பிலோமினா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனை நடக்கும் போது முஸ்லிம்கள் திரளாக வந்து வெளியே நிற்க வேண்டும்.

இந்த இக்கட்டான சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை காட்ட வேண்டும் என்று முனாவ்வர் பாஷா தெரிவித்துள்ளார்.