அதிமுக வேட்பாளர் யார்...! *ஓட்டப்பிடாரத்தில் திடீர் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 01:37

–நமது சிறப்பு நிருபர்–ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் நாளை வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் ஆளும் கட்சியில் சீட் பெறுவதற்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு மே மாதம் ௧௯ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அமமுக., உள்ளிட்ட கட்சிகளும், இன்னும் சில கட்சிகளும் போட்டியிட உள்ளது. தி.மு.க., வேட்பாளராக சண்முகையா அறிவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க., வேட்பாளர் யார் என்கிற எதிர்பார்ப்பு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., வை பொறுத்தமட்டில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதனால் சீட் கேட்டு வி.ஐ.பிக்களை அழைத்து கொண்டு பலர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இன்று விண்ணப்ப மனுக்கள் பெறப்படுகிறது. உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு நாளை மாலைக்குள் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க., வில் நெல்லை துாத்துக்குடி ஆவின் சேர்மனாக உள்ள சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ., மோகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தளபதி பிச்சையா, பெண் வக்கீல் வேட்பாளர் ஒருவர் என்று பலர் சீட் கேட்டு மேலிடத்திற்கு படையெடுத்துள்ளனர்.. ஆவின் சேர்மன் சின்னத்துரை ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெ., இருக்கும் போது அவருக்கு ஓட்டப்பிடாரம் தொகுதி சீட் அறிவிக்கப்பட்டு புதிய தமிழகம் கூட்டணி அமைந்ததால் கிருஷ்ணசாமிக்கு அந்த சீட் ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பை இழந்தவர். தற்போது எப்படியும் சீட் பெற வேண்டும் என்பதற்காக கடும் பிரஷர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் நிச்சயம் அவர் சீட்டை பெற்று வந்து விடுவார், மேலிடத்தில் உள்ள செல்வாக்கை நிரூபித்து விடுவார் என்றும் கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.

அதே போல்  ௨௦௦௬ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த மோகன் கட்சியில் லோக்கலில் பலம் பொருந்திய வி.ஐ.பிக்கள், மேலிட பிரமுகர்கள் உள்ளிட்டோரின் ஆதரவோடு எப்படியும் சீட் பெற்று விட வேண்டும் என்று நினைத்து மேலிடத்தில் கடும் பிரஷர் கொடுத்து வருகிறார்.

இதற்கிடையில் பெண் வக்கீல் ஒருவரும், இளைஞரணி செயலாளர் தளபதி பிச்சையாவும் சீட் கேட்டு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் யாருக்கு சீட் கிடைக்கப் போகிறது என்பது நாளை தெரிந்து விடும் என்று அ,தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது. கோஷ்டி பூசல் இல்லாமல் பொதுவான வேட்பாளரை தேர்வு செய்து அதிரடி திருப்பங்களை மேற்கொள்ள கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.