விடுமுறை முடித்து வெளியூருக்கு சிறப்பு பஸ் இயக்கம்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:17

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விடுமுறை முடித்துவிட்டு இன்று வெளியூர்  செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியூரில் படித்து கொண்டிருப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர், சேலம், மதுரை உட்பட பல இடங்களில் இருக்கிறார்கள். கடந்த 17 ம் தேதி மகாவீரர் ஜெயந்தி, 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல், 19 ம் தேதி புனித வெள்ளி, இன்று (21 ம் தேதி) ஈஸ்டர் பெருவிழா என தொடர்ந்து விடுமுறை இருந்ததால் வெளியூர்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டனர். அவர்கள் இன்று விடுமுறையை முடித்து விட்டு வெளியூர்களுக்கு செல்வதால் வெளியூர்கள் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும், அரசு விரைவு போக்குவரத்து கழகமும் சிறப்பு பஸ்களை பயணிகள் வசதிக்காக இயக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று நாகர்கோவில் வடசேரியில் இருந்து சென்னைக்கு 20 பஸ்கள், மதுரைக்கு 40 பஸ்கள், கோயம்பத்தூருக்கு 12 பஸ்கள் என மொத்தம் 72 கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வடசேரியில் இருந்து சென்னைக்கு 5 பஸ்கள், பெங்களூருக்கு 2 பஸ்கள், கோயம்பத்தூருக்கு 2 பஸ்கள் என   கூடுதலாக ஒன்பது சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.