இலவசக்கல்வி மாணவர் சேர்க்கை நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:14

சென்னை:கல்வி உரிமை சட்டப்படியான இலவசக் கல்வித்திட்ட மாணவர் சேர்க்கைக்கு, நாளை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி, முதல் வகுப்பு) குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2019–20 கல்வியாண்டுக்கான இலவசக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு, நாளை (ஏப்.22) முதல், மே 18ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர் தாங்களாகவே, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தங்களது வீட்டில் இருந்து ஒரு கி.மீ., முதல் 3 கி.மீ., துாரத்தில் இருக்கும் 5 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றில் ஏதாவது பள்ளியில் மாணவர் சேர்க்கை வழங்க விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், இ–சேவை மையங்கள், உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடங்களுக்கு மாணவரின் போட்டோ, பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல் சான்றிதழுடன் செல்ல வேண்டும். அங்கு, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை தரவேற்றம் செய்து, ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்துக்கு கட்டணம் எதுவும் கிடையாது. கூடுதல் விவரங்களை, முதன்மைக் கல்வி அலுவலகம், இ–சேவை மையம் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட அலுவலகங்களை அணுகி அறிந்துகொள்ளலாம்.