ரயில்வே ரூ.1கோடி பாக்கிக்காக 'இன்டர்சிட்டி' எக்ஸ்பிரஸ் ஜப்தி நடுவழியில் தத்தளித்தனர் பயணிகள்

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:10

மொகாலி:ரயில்வே எடுத்த நிலத்துக்கு உரிய இழப்பீடு தராமல்  நிர்வாகம் இழுத்தடித்தால் கோர்ட் உத்தரவின்படி ரயிலையை நேற்று ஜப்தி செய்ய வந்தனர். இதனால் 2மணி நேரம் பயணிகள் தத்தளித்தனர். இந்த சம்பவம் பஞ்சாபில் நடந்தது.

பஞ்சாபில் ரயில்வே பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடு தொகை ரூ.1 கோடியை நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு தராமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்தது.கையில்பணம் வந்தபாடில்லை. எனவே நிலத்தின் உரிமையாளர்கள்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ரயில்நிலையத்தையும் 2 ரயில்களையும் ஜப்தி செய்யும்படி மொகாலி கோர்ட் 2 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி கோர்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் பணம் கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில்  மொகாலி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது.  இதை விசாரித்த நீதிபதி மொகாலி ரயில்நிலையத்தையும் சண்டிகர்–அமிர்தசரஸ் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலையில் கோர்ட் உத்தரவுடன் அதிகாரிகள் மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் தரப்பிலான வழக்கறிஞரும் அங்கு வந்தனர்.  காலை 7.20 மணிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.  கோர்ட் உத்தரவை காட்டி ரயிலையும் ஜப்தி செய்ய வந்துள்ளதாகவும் இனி ரயிலை இயக்க முடியாது என்றும்  வக்கீல் கூறினார்.

 ரயில் டிரைவர் கீழே இறங்கி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். ரயில் நிற்பதைக் கண்டதும் பயணிகளும் கீழே இறங்கினர். அந்த வக்கீலிடம், நாங்கள் அவசர வேலையாக செல்லவேண்டி உள்ளது. உங்கள் பஞ்சாயத்தை பிறகு பார்த்துக்கொள்ளுங்கள். எங்களை தடுக்காதீர்கள்.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை இப்படி நடுவழியில் நிற்க வைப்பது நியாயமா...  உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று வாக்குவாதம் செய்தனர். என்னை தடுத்தால் கோர்ட் அவமதிப்பு ஆகி விடும். அதற்குரிய தண்டனையை நீங்கள் அடையவேண்டியது வரும் என்று வக்கீல் எச்சரிக்கவே பயணிகள் பின்வாங்கி விட்டனர்.

இது பற்றி ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு உடன்பாடு எட்டப்பட்டு ரயில் புறப்பட்டுச்செல்ல அனுமதித்தனர். இதனால் 9.15  மணிக்கு ரயில் கிளம்பியது. காலை 11.30 மணிக்கு  அமிர்தசரஸ் வரவேண்டிய ரயில் 1.30மணிக்கு வந்து சேர்ந்தது.