4 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் யார்...! ஓபிஎஸ் – இபிஎஸ் அவசர ஆலோசனை

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019 00:04

–நமது சிறப்பு நிருபர்-ஒரு மாதமாக, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும்,  தங்களது சொந்த ஊரில் ஓட்டளித்து விட்டு, சென்னைக்கு நேற்று முன்தினம் திரும்பினர். இதன்பின், வரும் மே 19ல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வியூகம் குறித்து இருவரும் மும்முர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது:

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட ஒட்டுமொத்த அதிமுகவினரும், லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுகவும் அமோக வெற்றிபெறும் என்று, மிகுந்த நம்பிக்கையுடன் உற்சாகமாக இருக்கிறோம்.  

அதிமுக வெற்றிபெற்றிருந்த திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றியை சாதித்துக் காட்ட வேண்டும் என்று, முதல்வரும் துணைமுதல்வரும் தீவிர முனைப்புடன் உள்ளனர். சென்னை திரும்பியதுமே, இதுகுறித்து போனில் நீண்டநேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஒட்டப்பிடாரத்தில் ஆவின் சேர்மன் சின்னத்துரை அல்லது முன்னாள் எம்எல்ஏ மோகன், திருப்பரங்குன்றத்தில் முத்துராமலிங்கம் அல்லது மறைந்த எம்எல்ஏக்கள் போஸ் மற்றும் சீனிவேலுவின் மகன்களில் யாராவது ஒருவர், அரவக்குறிச்சியில் கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், செந்தில்நாதன் ஆகியோரில் ஒருவர், சூலுாரில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அல்லது வேறு பிரமுகரை வேட்பாளராகக் களமிறக்கலாம் என, கட்சிக்குள் ஏற்கனவே சில கருத்து பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து, முதல்வரும் துணை முதல்வரும் இப்போது விரிவாக ஆலோசித்து வருகின்றனர்.  

இந்த 4 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்.21 – இன்று) விருப்பமனுக்கள் பெறப்படுகிறது. அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.22 – நாளை) நடத்தப்பட்டு, மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச்செயலாளர்களிடம் கருத்து கேட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தொகுதி பொறுப்பாளர்களும் அன்றே அறிவிக்கப்படுவார்கள்.

முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் 4 தொகுதிகளிலும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதிமுகவின் வெற்றியை உறுதிசெய்வார்கள்.

இவ்வாறு அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.