அபுதாபியில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா : ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 21:02

துபாய்,

   ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்படவுள்ள முதல் இந்து கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்றனர்.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு முதன்முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்திருந்த போது அபுதாபியில் ஒரு இந்து கோவில் கட்ட ஐக்கிய அரபு அமீரக அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோவில் தலைநகர் அபுதாபியில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த கோவிலை போச்சசன்வாசி ஸ்ரீ அக்‌ஷார்- புருசோத்தம் சுவாமிநாராயண் சான்ஸ்தா (பி.ஏ.பி.எஸ்) அமைப்பு கட்டுகிறது. இந்த ஆன்மீக அமைப்பின் 6வது குருவான சுவாமி மகராஜ் தலைமையில் 4 மணி நேர அடிக்கல் நாட்டும் பூஜை இன்று நடைபெற்றது.

அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் நவ்தீப் சூரி இந்த விழாவிற்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியை படித்தார்.

‘‘ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நாஹ்யானுக்கு 130 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உலகளாவிய மனிதநேய மதிப்புகள் மற்றும் ஆன்மீக ஒழுக்கங்களில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பகிர்ந்து கொண்ட பாரம்பரியத்தின் நினைவு சின்னமாக இந்த கோவில் திகழும்’’

‘‘இந்த கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 33 லட்சம் இந்தியர்களுக்கும் பிற கலாச்சாரத்தை சேர்ந்த மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என நம்புகிறேன்’’ என்று பிரதமர் மோடி தன் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாக இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறினார்.

சிறப்பான கட்டிட கலையுடன் கட்டப்படவுள்ள இந்த கோவில் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி மற்றும் மேம்பாட்டு நிபுணர் பிரித்வி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அபுதாபி – துபாய் நெடுஞ்சாலை அருகே 14 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த கோவிலில் பிரமாண்ட அரங்குகள், கலை கூடம், நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைந்திருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகங்களை குறிப்பிடும் வகையில் இந்த கோவிலில் 7 கோபுரங்கள் அமைக்கப்படும்.

இந்த கோவிலுக்கான கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றிணைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.