இந்தியா என்ற கருத்தாக்கத்தை பாஜக உடைத்துவிட்டது – சாம் பித்ரோடா குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 20:57

புது டெல்லி,

   இந்தியா என்ற கருத்தாக்கத்தை பாஜக உடைத்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவுத் தலைவர் சாம் பித்ரோடா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அவர் பேசியதாவது:

நாட்டின் மிகப் பெரிய கருத்துப் போராட்டத்தில் இன்று நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். எதையுமே பார்க்க மறுக்கும் மோடிக்காக நான் வேதனைப்படுகிறேன். இந்த நாட்டுக்காக பணியாற்றிய எண்ணற்ற மக்களின் திறமையை, கடின உழைப்பை மோடி மதிக்க மறுக்கிறார். இது நமது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம்.

உண்மை, நம்பிக்கை, அன்பு, எல்லோருக்கும் சமவாய்ப்பு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைப் பண்புகளை மகாத்மா காந்தி நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆனால் இந்த அரசாங்கத்தில் உண்மைக்கு மாறாக எல்லாம் பொய்கள், நம்பிக்கைக்கு பதிலாக எல்லோர் மீதும் அவநம்பிக்கை, அன்புக்கு மாறாக வெறுப்பு, எல்லோருக்கும் சமவாய்ப்புக்கு பதிலாக ஒதுக்கிவைத்தல், வேற்றுமையில் ஒற்றுமைக்குப் பதிலாக ஒற்றைத்தன்மை திணிப்பு என்பதுதான் நடக்கிறது.

பொழுது விடிந்து பொழுது போனால் நாள்தோறும் பொய் பேசும் நமது பிரதமரைப் போல எங்கும் நான் பார்த்தது இல்லை.

100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்றார்கள். எத்தனை உருவாகியிருக்கின்றன? பூஜ்யம். 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்றார்கள். எத்தனை உருவாகியிருக்கின்றன. பூஜ்யம். அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. இவ்வாறு சாம் பித்ரோடா பேசினார்.