தேங்கிக் கிடக்கும் இந்திய பொருளாதார எஞ்சினை இயக்க பெட்ரோல் போல நியாய் திட்டம் உதவும் ராகுல் வர்ணனை

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 20:40

பிலாஸ்பூர்

தேங்கிக்கிடக்கும் இந்திய பொருளாதார எஞ்சினை இயக்குவதற்கு பெட்ரோல் போல நியாய் திட்டம் உதவியாக அமையும் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.


சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவை பொதுத் தேர்தலுக்காக நடத்தப்படும் முதல் பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசும்பொழுது இந்தக் கருத்தை ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் பேசிய விவரம்:

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள இந்தியர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை தருவதற்கான திட்டமாக நியாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியை கொண்டு மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பொருள்கள் தேங்கிக் கிடக்காமல் விற்பனை செய்வதற்கு வழி பிறக்கும். தொழிற்சாலைகள் லாபகரமாக இயங்கி னால் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். எனவே தேங்கிக் கிடக்கும் இந்திய பொருளாதார என்ஜினை சுறுசுறுப்பாக இயக்குவதற்கு பெட்ரோல் போல நியாய் திட்டம் உதவும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்று தெரிவித்தார் .

2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பல வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளில் ஒன்று ஆண்டுக்கு 2 கோடிப் பேர் புதிதாக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி அப்பொழுது வாக்குறுதி தந்தார்.

அதைத்தவிர இந்தியர்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் செலுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்தத் திட்டம் சாத்தியமற்ற திட்டம் என்று எனக்கு நன்றாக தெரியும். சாதாரண இந்தியர்கள் கையில் இருந்த பணத்தை பறித்து அவருக்குப் பிடித்தமான தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் பாக்கெட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி போட்டு விட்டார் என ராகுல் காந்தி கூறினார்.

நியாய் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னால் விரிவான ஆலோசனைகள் நடத்தியதாக ராகுல் காந்தி கூறினார்.

உலகில் உள்ள தலைசிறந்த பொருளாதார நிபுணர்களுடனும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனும் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன, என ராகுல் குறிப்பிட்டார்.

 இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரத்திடம் மற்றவர்களிடமும் நான் ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு நாம் குறைந்த பட்ச வருமானமாக ஒரு தொகையை, ஒரு கணிசமான தொகையை தர வேண்டும். அதே சமயத்தில் அவ்வாறு பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதால், இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடாது, அதனால் குறைந்த பட்சமாக எவ்வளவு தொகையை ஆண்டுக்கு பொருளாதாரத்தில் பார்த்து பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மால் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று ஆலோசித்தோம்.

 இந்தத் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளுக்கு மத்தியில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் என்னிடம் வந்து, ஐந்து கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு ரூபாய் 72 ஆயிரம் அளவுக்கு நம்மால் பொருளாதாரத்துக்கு பாதிப்பும் இல்லாமல் பணம் வழங்க முடியும் என்று உறுதியாகக் கூறினார்.

அதனடிப்படையில் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டமாக நியாய் உருவாக்கப்பட்டது.

சத்தீஷ்கார் மாநிலத்தில் எல்லா விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதி வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி விவசாய கடன்களை எல்லாம் ரத்து செய்வதற்கு பணம் வேண்டுமே ,அந்தப் பணத்துக்கு எங்கே போவீர்கள் என்று திருப்பிக் கேட்டார்.

எங்கே போவது என்பதை நாம் இப்பொழுது செயல்முறையில் பிரதமர் மோடி அவர்களுக்கு நிரூபித்துக் காட்டி இருக்கிறோம்.

சத்தீஸ்கரிலும் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மாநில அரசுகளை அமைத்து உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் காங்கிரஸ் பதவி ஏற்ற பிறகு, உடனடியாக, விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அதைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூபாய் 72,000 செலுத்தப்பட்டு விடும் என்று உறுதியாக ராகுல் காந்தி கூறினார்.

21வது நூற்றாண்டில் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டுவிடும். அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு வறுமைக்கு எதிரான சர்ஜிக்கல் தாக்குதல்கள் இந்தியாவில் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப் படும்.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இப்பொழுது மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் உயர்ந்ததில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ததும் கபார் சிங் வரியை அமல் செய்ததும் தான் காரணம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட பொழுது ஏழை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து அவற்றை வங்கிகளில் செலுத்த செய்தனர். அந்தப் பணம் பின்னர் வர்த்தகர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்தது.

நிராவ் மோடி போன்றவர்கள் அந்தப் பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு ஓடி போய் விட்டனர் என ராகுல் காந்தி கூறினார். விவசாயிகளுக்கு என தனியாக வரவுசெலவுத்திட்டம் நிச்சயம் தாக்கல் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறினார்.

இந்தியாவில் எந்த மாநிலங்களில் எல்லாம் விவசாய கடனை செலுத்த எங்களால் முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்களோ அங்கெல்லாம் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பிலாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக அருண் சாவ் போட்டியிடுகிறார். 2014 இல் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லக்கன் லால் என்பவருக்கு பாஜக மீண்டும் வேட்பாளர் வேட்பாளராக போட்டியிட அனுமதி மறுத்துவிட்டது. அருண் சாவ் புதிதாக பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்