இந்தியா – பாகிஸ்தான் எல்லை வர்த்தகம் மூடப்பட்டதற்கு வணிகர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம்

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 18:04

புதுடில்லி/ஸ்ரீநகர்,

  பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதை பொருட்கள் ஆயுதம் போன்றவை எல்லை வர்த்தக மையங்கள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததால் இந்திய அரசு எல்லை வர்த்தகத்தை காலவரையின்றி மூடியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் வணிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் யூரி மாவட்டத்தில் உள்ள சாலாமாபாத் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்கன் – டா- பாக் ஆகிய இரு இடங்களில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகம் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு இந்த எல்லை வணிகம் துவங்கப்பட்டது.

வாரத்துக்கு 4 நாட்கள் பண்டமாற்று முறையிலும் வரியில்லா பண்டமாற்று முறையிலும் இந்த வணிகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பின் மத்திய அரசு பாகிஸ்தான் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியது.

விசாரணையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகம் வழியாக பாகிஸ்தானில் இருந்து போதை மருந்துகள், சட்டவிரோத ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தப்படுவதாக தெரியவந்தது. மேலும் அமெரிக்காவின் கலிபோர்னியா பாதாம் போன்ற பொருட்களும் சட்டவிரோதமாக விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

அதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகத்திற்கு இந்திய அரசு காலவரையின்றி தடை விதித்தது.

எல்லை வணிகம் மூடப்பட்டதால் சுமார் 280 வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் எல்லை வணிகம் கடந்த 2017ம் ஆண்டு ரூ.6,900 கோடி லாபத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

வாழைப்பழம், புளி, சிவப்பு மிளகாய், பாதாம் பருப்பு, பேரிட்சம் பழம், மூலிகைகள், மாங்காய், பிஸ்தா உள்ளிட்ட 21 பொருட்கள் எல்லை வணிகம் மூலமாக விற்கப்படுகின்றன.

மத்திய அரசுக்கு கண்டனம்

பல கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெற்று வந்த எல்லை வர்த்தகத்திற்கு மத்திய அரசு காலவரையின்றி தடை விதித்ததற்கு ஜம்மு காஷ்மீர் வணிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எல்லை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஹிலால் துருக்கி, ‘‘எல்லை வணிகம் மூலமாக கடத்தல் நடப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை தடுக்க வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கலாம். எல்லை வர்த்தகத்திற்கு ஒரேயடியாக தடை விதித்திருக்க கூடாது. இதுபோல் உலகில் வேரெங்கும் நடந்ததில்லை’’

‘‘இந்த இரு வணிக மையங்கள் மூலமாக 1.70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 6,170 லாரிகள் ஓடுகின்றன, நூற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வேலையில்லா திட்டாட்டம் மற்றும் மக்களுக்கு உதவியற்ற சூழ்நிலையை மட்டும் தான் உருவாக்கும்’’ என்று ஹிலால் துருக்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எல்லை வணிகம் குறித்து பேசிய பிடிபி தலைவரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெஹ்பூமா முப்தி கூறுகையில் ‘‘நான் முதல்வராக இருந்த போது எல்லை வணிகத்தை மூட வேண்டும் என்று நிர்பந்திக்கப்ட்டேன். ஆனால் அவ்வாறு நான் செய்யவில்லை. வணிக போக்குவரத்தை திறந்து வைப்பது தான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும்’’

‘‘துரதிஷ்டவசமாக அந்த முயற்சியில் நாம் பின்னடைவை சந்தித்துள்ளோம்’’ என மெஹ்பூபா முப்தி தெரிவித்தார்.

ஹூரியத் தலைவர் மிர்வாயிஸ் உமர் பரூக் கூறுகையில் ‘‘ இந்தியா – பாகிஸ்தான் உறவில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலக்கட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால நன்மைக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதால் மக்கள் பெரும் விலையை கொடுக்க நேரும்’’ என்று மிர்வாயிஸ் உமர் பரூக் நேற்று கூறினார்.