தேர்தல் பத்திரங்களால் பாஜகவுக்கே அதிக லாபம்

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 14:23

புது டெல்லி,

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கே அதிக லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த 2017-18 நிதி ஆண்டில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்தம் ரூ. 221 கோடி நிதியில், பாஜகவுக்கு ரூ. 210 கோடி நிதி கிடைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 5 கோடி நிதி மட்டுமே கிடைத்திருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாவற்றுக்கும் ரூ. 6 கோடி நிதி மட்டுமே கிடைத்திருக்கிறது.

நிதி கொடுப்பவர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத காரணத்தால், போலி நிறுவனங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கறுப்புப் பணம் நன்கொடையாக வழங்கப்படுவதற்கு இந்த திட்டம் வழிவகுக்கிறது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறைகூறியிருக்கிறது.

தேர்தல் ஆணையமும் கூட இத்திட்டத்தைக் குறை சொல்லி இருக்கிறது.

நிதி அளிப்பவர்கள் யார் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத காரணத்தால், அரசியல் கட்சிகளுக்கு யார் மூலம் நிதி கிடைக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வதை இது தடுக்கிறது என்றும், இது வெளிப்படைத் தன்மைக்கு எதிரானது என்றும் தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது.