புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 12:45

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் ஆப்பில் அவதூறு கருத்துகளை சில நபர்கள் பதிவிட்டுள்ளனர். இது அச்சமூக மக்களை பெரிதும் கோவமடைய செய்துள்ளது. அந்த நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நாளை வரை (ஏப்ரல் 21ஆம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பிரச்சனை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் அளித்த புகாரில் சுமார் 1000 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.