மத்திய பாஜக அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது: பிரியங்கா காந்தி சாடல்

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 12:36

மணந்தவாடி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலத்திற்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, மணந்தவாடி பகுதியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய அவர்,”கடந்த 5 வருட காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் மட்டுமே இறங்கியது” என்று குற்றஞ்சாட்டினார்.

“இது என்னுடைய நாடு. இந்த மலைகள் எல்லாம் என்னுடைய நாடு. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோதுமை நிலங்கள் என்னுடைய நாடு. தமிழகம் என்னுடைய நாடு. குஜராத் மற்றும் வடகிழக்கு பகுதி என்னுடைய நாடு. ஆனால், இவற்றை பிளவு படுத்தியது பாஜக” என்று விமர்சித்தார்.

“கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பெரும்பான்மையுடன் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைத்தது. நம் நாட்டு மக்கள் முழு நம்பிக்கையுடன் அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தனர். ஆனால், ஆட்சி அதிகாரம் கிடைத்த நாள் முதல், தொடர்ந்து மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது மோடி அரசு ” என்று சாடினார்.

“விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், இளைஞர்களுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அதிகாரத்திற்கு வந்ததும், அவர்களுக்கு வாக்களித்த மக்களை மறந்துவிட்டனர்” என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.