2ம் கட்ட தேர்தலுக்குப் பின் தூக்கத்தை இழந்த மம்தா: பிரதமர் மோடி விமர்சனம்

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 11:34

புனியாத்பூர்

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த 2 கட்ட தேர்தலுக்குப் பின், மம்தா பானர்ஜி தூக்கத்தை இழந்து தவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புனியாத்பூரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் பேசிய அவர், மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

இதில் பேசிய பிரதமர் மோடி,

”தாய், நிலம், மக்கள் என்று கூறி மாநில மக்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏமாற்றி வருகிறார்” என்று சாடினார்.

“மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் அறிக்கையை பெற்றுக்கொண்ட ”வேகத்தடை” மம்தா பானர்ஜிக்கு தூக்கமே வருவது இல்லை” என்றும் விமர்சித்தார்.

”பங்களா தேஷில் இருந்து வரவழைக்கப்பட்ட மக்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்றனர். இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று. சிறுபான்மை சமூக மக்களை இழுக்கவே இத்தகையை செயல்களை கட்சி மேற்கொண்டு வருகின்றது” என்று மோடி குற்றஞ்சாட்டினார்.